நிலம் கையகப்படுத்த இடைக்காலத்தடை... 8 வழிச் சாலை திட்டத்தில் உயர் நீதிமன்றம் சொல்வது என்ன? | What did high court say about salem 8 way expressway project

வெளியிடப்பட்ட நேரம்: 09:24 (22/08/2018)

கடைசி தொடர்பு:10:00 (22/08/2018)

நிலம் கையகப்படுத்த இடைக்காலத்தடை... 8 வழிச் சாலை திட்டத்தில் உயர் நீதிமன்றம் சொல்வது என்ன?

எட்டு வழிச் சாலைக்கு எதிராகப் பல கட்டங்களாகப் போராடிக் கொண்டு வந்திருக்கிறோம். பல விவசாயிகளும், தன்னார்வலர்களும் இதனை எதிர்த்து போராடிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.

நிலம் கையகப்படுத்த இடைக்காலத்தடை... 8 வழிச் சாலை திட்டத்தில் உயர் நீதிமன்றம் சொல்வது என்ன?

சேலம் முதல் சென்னை வரை எட்டு வழிச் சாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதற்கு விவசாயிகள் கடுமையாக எதிர்ப்புகளைத் தெரிவித்தும் வருகின்றனர். சில நாள்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் நிலம் அளவிடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்திருந்தார். இதற்கிடையே `நிலங்களைக் கையகப்படுத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும்' என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மற்றும் பா.ம.க விவசாயிகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

சேலம் எட்டு வழிச்சாலை

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், `விவசாயிகளை மிரட்டி நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லை. அவர்கள், விரும்பித்தான் நிலத்தைத் தருகிறார்கள். நிலம் தர மறுக்கும் விவசாயிகளிடம் வருவாய்த் துறை அதிகாரிகள், திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்குகிறார்கள். சட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் நிலங்களைக் கையகப்படுத்துகிறோம்' என்று தெரிவித்தார். பூவுலகின் நண்பர்கள் சார்பில், விவசாயிகளிடம் காவல்துறையினர் மிரட்டி நிலத்தை அளக்கும் வீடியோ பதிவு காட்டப்பட்டு, சட்டத்துக்குப் புறம்பான வகையில் நிலம் கையகப்படுத்தப்படுகிறது என்று வாதிடப்பட்டது. அதை முழுமையாகக் கேட்ட நீதிபதி, `மனுதாரர்கள் கூறும் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது. எனவே, சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு அடுத்த உத்தரவு வரும் வரை நிலங்களின் உரிமையாளர்களை வெளியேற்றக் கூடாது' என்று உத்தரவிட்டார். 

இது பற்றி வழக்கு தொடர்ந்திருக்கும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச் செல்வனிடம் பேசினோம். ``இப்போது கிடைத்திருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்றுதான். எட்டு வழிச் சாலைக்காக நிலத்தை அளவிடுவதில்தான் பிரச்னை நீடிக்கிறது. இப்போது அதற்காகத்தான் இடைக்காலத் தடை தரப்பட்டிருக்கிறது. பூவுலகின் நண்பர்கள் சார்பில் பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்கில் நிலம் கையகப்படுத்துவதற்காக அமல்படுத்தும் சட்டத்தில் இருக்கும் குளறுபடிகளை சுட்டிக்காட்டி வெற்றிச்செல்வன்இருக்கிறோம். நிலம் கையகப்படுத்துவதற்காக இப்போது அமல்படுத்தப்பட்டிருப்பது தேசிய நெடுஞ்சாலைகள் பாதுகாப்புச் சட்டம். இதன்படி நிலம் கையகப்படுத்தும்போது, நிலத்திற்கான இழப்பீடு, மறு குடியமர்வு ஆகியவை எதையும் பின்பற்றத் தேவையில்லை. ஆனால், இந்தியாவில் எந்தச் சாலைகள் கொண்டுவரப்பட்டாலும், 2013-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டப்படி நடக்க வேண்டும். சட்டப்படி, மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி, உள்ளாட்சி அமைப்புகளோடு கலந்து ஆலோசித்து, சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கையைத் தயார் செய்து முறையாகச் சாலையை அமைக்க வேண்டும். இந்தியாவிலுள்ள எந்தவிதமான சட்டத்தின் கீழ் நிலத்தைக் கையகப்படுத்தினாலும், இந்தச் சட்டத்தில் இருக்கும் நடைமுறைகளை நிச்சயமாக அரசு பின்பற்ற வேண்டும். 

தேசிய நெடுஞ்சாலை அமைப்பது போன்ற சட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும்போது மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம், சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கை ஆகியவற்றுக்குத் தேவை இல்லாமல் போய்விடுகிறது. நாங்கள் தொடுத்த வழக்கில் இத்திட்டம் வேண்டுமா என மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். 2013-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டப்படி மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி அவர்கள் சம்மதித்த பின்னர், சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கை சமர்ப்பித்த பின்னர்தான் இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தில் எந்தவிதமான நடைமுறையையும் பின்பற்றவில்லை என்பது போன்ற வாதங்களை முன்வைத்தோம். அதைக் கருத்தில் கொண்ட நீதிபதி தீர்ப்பினை கொடுத்திருக்கிறார். முன்னரே வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஏன் மக்களின்மீது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்பது உள்ளிட்ட பல கேள்விகளை நீதிபதிகள் கேட்டிருந்தனர். இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். அல்லது சென்னை உயர் நீதிமன்றத்திலேயே வழக்கை தொடரலாம். ஆனால், நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றிவிட்ட பின்னர்தான் வழக்கை தொடர முடியும்" என்றார். 

இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன் பேசும்போது, ``எட்டு வழிச் சாலைக்கு எதிராக பல கட்டங்களாக போராடிக் கொண்டு வந்திருக்கிறோம். பல விவசாயிகளும், தன்னார்வலர்களும் இதனை எதிர்த்து போராடிக் கொண்டு வந்திருக்கிறார்கள். இவ்வழக்கில் கிடைத்துள்ள இடைக்காலத் தடையை முதல் வெற்றியாகவே கருதுகிறோம்" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close