``மறக்க மாட்டோம்.. பிரச்னைனா வந்து நிப்போம்" - தமிழகம் குறித்து கேரள இளைஞர் நெகிழ்ச்சி

தமிழர்களின் அன்பை மறக்க மாட்டோம்.. இனி தமிழகத்துக்கு ஒரு பிரச்னை வந்தால், நாங்கள் நிற்போம் என்று கேரள இளைஞர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

கேரளா

தண்ணீரில் தத்தளிக்கும் கடவுளின் தேசத்துக்கு, உலகம் முழுவதும் இருந்து உதவிக் கரங்கள் நீண்டு வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் இருந்து அதிகளவிலான நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மற்ற மாநிலங்களைவிட தமிழர்கள்தான் அதிக உதவி செய்வதாக, கேரள மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஶ்ரீஜித் என்ற இளைஞர், ``தமிழ் ஆளுங்க என்றாலே முன்பு இங்கு ஒரு மாதிரி பாப்பாங்க. அவர்களுக்கு, கல்வித்திறன் குறைவு என பலர் தப்பா நினைப்பாங்க. நான் ரெண்டு நாள் கேம்ப்ல இருந்தேன். டூ வீலர்ல இருந்து, லாரி வரை டன் கணக்குல எங்களுக்குத் தேவையான பொருள்களை கொடுத்துட்டு இருக்கீங்க. ஜல்லிக்கட்டு விஷயத்துல, உங்களோட பவர் காமிச்சீங்க. இப்ப கேரள வெள்ளம் நேரத்துல, உங்க மனசோட அன்ப காமிச்சுருக்கீங்க.

இப்பவும் லோடு லோடாக எல்லா மாவட்டத்துல இருந்து நிவாரணம் வந்துட்டு இருக்கு. இப்ப நிலைமை கொஞ்சம் நார்மல் ஆகி, எல்லோரும் வீட்டுக்குப் போக ஆரம்பிச்சுட்டாங்க.  இந்த உதவிய நாங்க எப்பவும் மறக்க மாட்டோம். ரெண்டு நாள் கேம்ப்ல இருந்த எனக்கே இப்படின்னா, பல நாள்களாக இருப்பவங்க அத நல்லாவே பார்த்துருப்பாங்க. தமிழ்நாட்ல இனி எந்தப் பிரச்னை வந்தாலும் நாங்க அங்கு வந்து நிப்போம். உங்களுக்காக பிரார்த்தனை பண்ணிக்கறோம்" என்று பேசியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!