வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (22/08/2018)

கடைசி தொடர்பு:13:00 (22/08/2018)

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட 18-ம் கால்வாய் - விவசாயிகள் மகிழ்ச்சி

போதிய மழை இல்லாததால், கடந்த இரண்டு ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த 18-ம் கால்வாய் இன்று காலை திறக்கப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், லோயர்கேம்பில் உள்ள 18-ம் கால்வாயின் தலைமதகை திறந்துவைத்தார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிகின் கனவுத்திட்டமாக இருந்த 18-ம் கால்வாய் திட்டம், தி.மு.க அரசின் முயற்சியால், கடந்த 2008-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணைகளின் நீர் இருப்பைப் பொறுத்து, ஆண்டுக்கு ஒருமுறை 18-ம் கால்வாய் திறக்கப்படும். இரு அணைகளையும் சேர்த்து 6,250 மில்லியன் கன அடிக்கு மேல் தண்ணீர் இருக்கும் பட்சத்தில் 18-ம் கால்வாய் திறக்கப்பட வேண்டும் என்பது விதியாக உள்ளது. அதன்படி, இந்த ஆண்டு, தென்மேற்குப் பருவமழையின் தீவிரத்தின் காரணமாக இரு அணைகளிலும் தண்ணீர் போதிய அளவைவிட அதிகமாக இருந்ததால், 18-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்றுக்கொண்ட அரசு, இன்று காலை, 18-ம் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட்டது. கம்பம் அருகே உள்ள லோயர்கேம்பில் இருந்து 41 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் 18-ம் கால்வாய், 44 கண்மாய்களைச் சென்றடையும். இதனால் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவுள்ள விவசாயப் பகுதிகள் பயன்பெறும். நிலத்தடி நீர் பெருகும். 4,615 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களுக்கு விநாடிக்கு 279 கன அடி நீர் வீதம் 9 நாள்களுக்கு 18-ம் கால்வாயில் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

18-ம் கால்வாயை சுத்தகங்கை ஓடையில் இருந்து கூவலிங்கம் ஆறு வரை நீடித்து கொட்டகுடி ஆற்றுடன் இணைக்கும் பணி இந்தாண்டு மார்ச் மாதம் நிறைவு பெற்றுள்ளதால், சோதனை அடிப்படையில் அதற்கும் சேர்த்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காய்ந்து கிடந்த பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.