‘கேரள மக்களுக்கு எங்களால் முடிந்த உதவி!’- கோவை திருநங்கைகள்

கேரள மக்களுக்கு, கோவையைச் சேர்ந்த திருநங்கைகள் நிவாரணப் பொருள்களை கொடுத்து உதவியுள்ளனர்.

கோவை திருநங்கைகள்

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து மாநிலத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. மழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளையும், உடைமைகளையும் இழந்த மக்களுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கேரளாவுக்கு உதவிகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், கேரள மக்களுக்கு கோவையைச் சேர்ந்த திருநங்கைகள் நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளனர். அதன்படி, கோவையில்  உள்ள திருநங்கைகள் இணைந்து, கேரள மாநிலம் பாலக்காடுக்கு நேரடியாகச் சென்று நிவாரணப் பொருள்களை  வழங்கியுள்ளனர். குழந்தைகளுக்கான உடைகள் மற்றும் சமையலுக்குத் தேவையான பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை பாலக்காடு மாவட்ட துணை கலெக்டர் ரேணு ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்து வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து திருநங்கை ஷில்பா கூறுகையில், ``நம் அண்டை மாநிலம் இப்படி ஓர் துயரில் இருப்பதைப் பார்க்கவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது. முதல்கட்டமாக எங்களால் முடிந்த உதவிகளைச் செய்துள்ளோம். கேரள மக்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்வோம்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!