ராஜாஜி ஹால் நெரிசலில் ராகுல்... சிக்கலில் ஐ.பி.எஸ்-கள்... தப்பிய ஒருவர் | Security lapse at Rajaji Hall - IPS Officer's got Transfer order

வெளியிடப்பட்ட நேரம்: 13:53 (22/08/2018)

கடைசி தொடர்பு:15:25 (22/08/2018)

ராஜாஜி ஹால் நெரிசலில் ராகுல்... சிக்கலில் ஐ.பி.எஸ்-கள்... தப்பிய ஒருவர்

மோடி, ஸ்டாலின், கனிமொழி

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த ராகுல், கூட்ட நெரிசலில் சிக்கினார். இந்த விவகாரத்தால் சில ஐ.பி.எஸ் அதிகாரிகள் சென்னையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

முன்னாள் முதல்வரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி, உடல் நலக்குறைவால் ஆகஸ்ட் 7-ம் தேதி மரணமடைந்தார். அவரின் உடல் இறுதி அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் ஆகஸ்ட் 8-ம் தேதி வைக்கப்பட்டிருந்தது. இறுதி அஞ்சலி செலுத்த இந்தியாவிலிருந்து முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வந்தனர். முற்பகலில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள்  வந்தனர். அப்போது எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. 

வி.வி.ஐ.பி-க்களின் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு போலீஸ் அதிகாரி என்ற வீதத்தில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ராஜாஜி அரங்கில் வி.வி.ஐ.பி பாதுகாப்பில் சென்னை கூடுதல் கமிஷனர்கள் சாரங்கன், ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். பிற்பகலில் ராஜாஜி அரங்கத்துக்குள் வி.வி.ஐ.பி-க்கள் வரும் வழியாக ராகுல்காந்தி, பலத்த பாதுகாப்புடன் வந்தார். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருக்க வேண்டிய சில ஐ.பி.எஸ் அதிகாரிகள் யாரும் இல்லையாம். இதனால் கூட்ட நெரிசலில் ராகுல்காந்தி சிக்கிக்கொண்டார். அவருக்குப் பிறகு வந்த வி.வி.ஐ.பி-க்களுக்கும் அதே நிலைமை ஏற்பட்டுள்ளது. வி.வி.ஐ.பி-க்கள் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி குறித்து மத்திய அரசு, தமிழக அரசிடம் ரிப்போர்ட் கேட்டது. மேலும், வி.வி.ஐ.பி பாதுகாப்புக் குளறுபடிகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இதையடுத்து, வி.வி.ஐ.பி-க்கள் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிகுறித்து தமிழக அரசு, மாநில உள்துறை மற்றும் போலீஸ் உயரதிகாரிகளிடம் விசாரணை நடத்தியது. அப்போது, குளறுபடிக்குக் காரணமாக ஐ.பி.எஸ் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டது. அதன்படி ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாறுதல் பட்டியல் தயாரானது. அதில் பாதுகாப்புப் பணியிலிருந்த சாரங்கன், ஜெயராமன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால், வி.வி.ஐ.பி பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிக்குக் காரணமாக இருந்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் தப்பிவிட்டார். மேலிட செல்வாக்கு காரணமாக அவரின் பெயர் பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் உள்ளது. இதனால், இடமாறுதல் செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகள் வருத்தத்தில் உள்ளனர். 

பாதுகாப்பு குளறுபடிக்கு என்ன காரணம் என்று போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ``காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து தமிழக காவல்துறையினர் முழு நேரமும் பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டனர். அதுவும் கடைசி ஒரு வாரம் காவேரி மருத்துவமனையில் தொண்டர்கள் அதிகளவில் குவிந்தனர். இதனால், அவர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் படாதபாடுபட்டனர். இந்தச் சமயத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை கருணாநிதி மரணமடைந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அடுத்து மெரினா இடம் விவகாரத்தால் காவேரி மருத்துவமனையிலும் கோபாலபுரத்திலும் தொண்டர்களைக் கட்டுப்படுத்த நாங்கள் கடுமையாகப் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒருவழியாக மெரினாவில் இடம் கிடைத்ததும் அமைதி நிலவியது. வி.வி.ஐ.பி-க்கள் வருகை குறித்த தகவல் எங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாங்களும் செயல்பட்டோம். இந்தச் சமயத்தில் வி.வி.ஐ.பி-க்கள் செல்லும் வழியில் ஏராளமான தொண்டர்கள் நுழைந்துவிட்டனர். இதனால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும், வி.வி.ஐ.பி-க்கள் வருகையில் கடைசி நேர மாற்றத்தால்தான் குளறுபடி ஏற்பட்டது. அதில் ஒரு வி.வி.ஐ.பி ஒரு மணி நேரத்துக்கு முன்கூட்டியே வந்ததே பெரும் பிரச்னையாகிவிட்டது. 48 மணி நேரம் தூங்காமல் உழைத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு இடமாறுதல் பரிசாக வழங்கப்பட்டுள்ளது" என்றனர்.