கேரளாவுக்கு 6 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்த அ.தி.மு.க எம்.எல்.ஏ

 

 

கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ கீதா 6 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை கேரளாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

 

 

கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதற்கட்டமாக ரூபாய் 17.05 லட்சம் மதிப்பிலான 14 வகையான நிவாரணப் பொருள்கள் 18.8.2018 அன்று அனுப்பிவைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா சார்பில் வழங்கப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அனுப்பிவைத்தனர்.
 

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ``கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் அனைவரும் நிவாரணப்பொருள்களை வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தினார். அதன் பேரில் கரூர் மாவட்டத்தின் சார்பில் முதற்கட்டமாக ரூ.17.05 லட்சம் நிவாரணப் பொருள்கள் கடந்த 18.8.2018 அன்று அனுப்பிவைக்கப்பட்டது. தற்போது கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதாவின் சார்பில் வழங்கப்பட்டுள்ள தண்ணீர் பாட்டில்கள், போர்வைகள், அரிசி, புடவைகள், சானிட்டரி நாப்கின்கள், விரிப்புகள், பாய் உள்ளிட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான 7 வகையான பொருள்கள் ஒரு லாரி மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றது. வழங்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படும். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூலம் கேரள மாநிலத்தின் தேவைக்கு ஏற்ப பொருள்கள் அந்தந்தப் பகுதிகளுக்கு பிரித்து வழங்கப்படும். மேலும், கரூர் மாவட்டத்தில் இருந்து தொடர்ந்து நிவாரணப் பொருள்கள் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.  

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!