வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (22/08/2018)

கடைசி தொடர்பு:15:30 (22/08/2018)

‘கொள்ளிடத்தில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்!’- ஆற்றங்கரை தடுப்புச் சுவரில் உடைப்பு

நாகை மாவட்டம் அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றங்கரை தடுப்புச்சுவரில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கொள்ளிடம்

கொள்ளிடம் ஆற்றில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே வாடி, பாலூரான் படுகை, நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளமணல் ஆகிய கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. எனவே கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொள்ளிடம்

இந்த நிலையில், கொள்ளிடம் ஆற்றின் வலதுகரையில் அளக்குடி கிராமத்தின் ஆற்றங்கரையில் கட்டப்பட்ட சிமென்ட் கான்கிரீட் தடுப்புச் சுவர் வெள்ளத்தில் இடிந்து விழுந்தது. தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து கரையைப் பலப்படுத்தும் பணி நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று  இந்த தடுப்புச் சுவரில் 20 மீட்டர் தூரத்துக்கு மீண்டும் உடைப்பு ஏற்பட்டது. இதை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அளக்குடி கிராமத்தில் உள்ள தடுப்புச் சுவரில் தொடர்ந்து உடைப்பு ஏற்பட்டு வருவதால் ஆற்றங்கரை எப்போது வேண்டுமானாலும் உடையும் அபாய நிலை உள்ளது. இதனால் அளக்குடி, முதலைமேடு திட்டு, புளியந்துறை, பழைய பாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

கொள்ளிடம்

இது குறித்து தகவல் அறிந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டார். உடைப்பை சீரமைக்கும் பணியை தீவிரப்படுத்தினார். அவருடன் நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், மயிலாடுதுறை உதவி ஆட்சியர் தேன்மொழி, மாவட்ட திட்ட இயக்குநர் சங்கர், பி.வி.பாரதி எம்.எல்.ஏ., கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குநர் நெடுஞ்செழியன் உடன் இருந்தனர்.

கொள்ளிடம்

அப்போது ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,  ``கொள்ளிடம் ஆற்றங்கரையைப் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. வருகிற நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிக மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆற்றின் கரை உடைய வாய்ப்புள்ளது. அந்த நிலை ஏற்படாத வகையில் கரையைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கும், நெல், மரவள்ளி கிழங்கு, வாழை சாகுபடி செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரணம் வழங்க முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்" என்று கூறினார்.