வெளியிடப்பட்ட நேரம்: 16:29 (22/08/2018)

கடைசி தொடர்பு:16:29 (22/08/2018)

பத்தாம் வகுப்பு வரை பயின்றவர்கள் இனி நேரடியாகப் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுத முடியாது, ஏன்?

இது வரவேற்கத்தக்க அறிவிப்பாக இருந்தாலும், மாணவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும்!

பத்தாம் வகுப்பு வரை பயின்றவர்கள் இனி நேரடியாகப் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுத முடியாது, ஏன்?

``பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு இணையான தேர்வை முடித்தவர்கள் இனி நேரடியாகப் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வை எழுத முடியாது. அவர்கள் ப்ளஸ் ஒன் தேர்வைத் தனித்தேர்வர்களாக எழுதி தேர்ச்சி பெற்ற பின்னரே எழுத முடியும்" 

என அரசுத்  தேர்வுகள் இயக்ககம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு திடீர் காரணங்களால் பன்னிரண்டாம் வகுப்பு பயில விரும்பும் மாணவர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடும். இந்த அறிவிப்பால் மாணவர்களுக்கு என்ன நன்மைகள் ஏற்படும்... இது வரவேற்கத்தக்க விஷயம் தானா... போன்ற சந்தேகங்களைத் தெரிந்து கொள்வதற்காகக் கல்வியாளர், பேராசிரியர் கல்விமணியிடம் கேட்டோம்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு

''10-ம் வகுப்பு முடிந்ததும் மாணவர்கள் 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்கிற நோக்கத்தில் பதினொன்றாம் வகுப்பிலேயே பன்னிரண்டாம் வகுப்புக்கான பாடத் திட்டங்களைப் படிக்கத் தொடங்கிவிடுகின்றனர். இதனால். அவர்களுடைய கற்றலில் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், அவர்கள் அந்தப் பாடங்களைக் குருட்டுத்தனமாக மனப்பாடம் செய்கின்றனர். பதினொன்றாம் வகுப்பை பொதுத் தேர்வாக அறிவித்தது நல்லதே. ஏனெனில், அதன் மூலம் மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பையும் முக்கியமாகக் கருதி அதற்கும் முக்கியத்துவம் அளித்து விரும்பிப் படிப்பார்கள். எனவே, பதினொன்றாம் வகுப்பு தேர்வை பொதுத்தேர்வாக அறிவித்தது நல்ல விஷயமே.

கல்விமணிபத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு இணையான தேர்வை முடித்தவர்கள் நேரடியாகப் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை எழுத முடியாது என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது சரியான அறிவிப்பே. ஏனெனில், பதினொன்றாம் வகுப்பையும் பன்னிரண்டாம் வகுப்பையும் இணைத்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகின்றது. பதினொன்றாம் வகுப்பில் 600 மதிப்பெண்களும் பன்னிரண்டாம் வகுப்பில் 600 மதிப்பெண்களும் பெற வேண்டும். இப்படி இருக்கும் பட்சத்தில், பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாமல் நேரடியாகப் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவது எப்படிச் சாத்தியமாகும். அதனால்தான் இப்படியோர் அறிவிப்பை தேர்வுத்துறை இயக்ககம் வெளியிட்டுள்ளது. இரண்டு மதிப்பெண்ணையும் கருத்தில் கொண்டுதான் அவர்களுடைய மேற்படிப்பு பற்றிய விஷயங்களைக் கையாள முடியும். 

பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக் பயிலும் மாணவர்கள் இன்ஜினீயரிங் துறையில் படிக்க விருப்பப்பட்டால் உடனே நேரடியாக இரண்டாம் ஆண்டு பயில்வதற்கு சேர்க்கப்படுகிறார்கள். இது இன்று வரை நடைமுறையிலிருக்கும் விஷயம்தான் என்றாலும், ஒருவேளை, பத்தாம் வகுப்பு வரை பயின்றுள்ள பாலிடெக்னிக் மாணவர்கள் அரசுத் தேர்வுகள் எழுத விரும்புகிறார்கள் எனில், சில அரசுத் தேர்வு எழுதுவதற்குப் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என்கிற விதிமுறைகள் இருக்கும். இந்தச் சூழலில் அவர்கள் தனித்தேர்வு மையங்களில் சேர்ந்து நேரடியாகப் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை எழுதுவார்கள். ஆனால், தற்போது அது சாத்தியமில்லை. எனவே, இந்தக் கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு பயில விரும்பினால் இரண்டு ஆண்டுகள் விரும்பிப் படித்தே ஆக வேண்டும். இது வரவேற்கத்தக்க அறிவிப்பாக இருந்தாலும், மாணவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும்'' என்றார்.

இந்தச் சூழலைப் பொறுத்தவரை மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு அவர்களுக்கேற்ற துறையைத் தேர்ந்தெடுப்பது தான் நல்லது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்