வெளியிடப்பட்ட நேரம்: 16:47 (22/08/2018)

கடைசி தொடர்பு:16:48 (22/08/2018)

``சத்துணவு முட்டை டெண்டர் விதிமுறைகள் வரவேற்கத்தக்கது!'' - நாமக்கல் கோழிப் பண்ணையாளர்கள்

சத்துணவு முட்டை டெண்டர் விதிமுறைகள் குறித்த கட்டுரை...

``சத்துணவு முட்டை டெண்டர் விதிமுறைகள் வரவேற்கத்தக்கது!'' - நாமக்கல் கோழிப் பண்ணையாளர்கள்

த்துணவு முட்டை கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, குற்றச்சாட்டுக்கு ஆளான நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த மாதம் மீண்டும் முட்டை  கொள்முதலுக்கான டெண்டர் கோரப்பட்டு, பின் அதுவும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு தற்போது அதன் விதிமுறைகளில் சில மாற்றங்களைச் செய்து மீண்டும் டெண்டர் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதற்குப் பலரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

சத்துணவு முட்டை சாப்பிடும் குழந்தைகள்

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நாள்தோறும் மதிய உணவில் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு இந்தப் பள்ளிகளுக்கு மட்டும் 55 லட்சம் முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு முட்டை விநியோகம் செய்யும் பணிகளை, கடந்த சில ஆண்டுகளாகவே நாமக்கல்லைச் சேர்ந்த கிறிஸ்டி நிறுவனம் செய்துவந்தது. இந்த நிறுவனம் முட்டை கொள்முதலில் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகத் தொடர்ந்து புகார் எழுந்தது. மேலும், கோழிப் பண்ணையே இல்லாமல் முட்டை விநியோகம் செய்யும் நிறுவனமாக அது இருந்து வருவதாக, நாமக்கல் முட்டை உற்பத்தியாளர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், கடந்த மாதம் கிறிஸ்டி நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது 10 கிலோ தங்கம், பல கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் அதிகாரிகள், அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்ட அன்பளிப்புகள் குறித்த ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. ஆனாலும், ``சத்துணவு முட்டை டெண்டரில், எவ்வித முறைகேடும் நடக்கவில்லை. சட்டப்படிதான் டெண்டர் விடப்பட்டுள்ளது'' எனத் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 
இந்த நிலையில், கடந்த மாதம் 31-ம் தேதியோடு  முட்டைக்கான டெண்டர் முடிவுக்கு வந்ததையடுத்து, கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி அன்று இந்தக் கல்வி ஆண்டில் முட்டை சப்ளை செய்வதற்கான டெண்டர் அறிவிப்பைச் சமூக நலத்துறை வெளியிட்டது. அந்த டெண்டர் ஆவணத்தில், ``நாள் ஒன்றுக்கு 50 லட்சம் அக்மார்க் முத்திரை கொண்ட முட்டைகள் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இந்த டெண்டரில் பங்கேற்பதற்கான சில விதிமுறைகளையும் சமூக நலத் துறையினர் அறிவித்திருந்தனர். அந்த விதிமுறைகள் கிறிஸ்டி நிறுவனத்துக்கும், அதன் துணை நிறுவனங்களுக்கும் பொருந்தும் வகையில் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. 

இந்த நிலையில், டெண்டர் முடிவு செய்யும் நாளான ஜூலை 11-ம் தேதிக்கு முன்பாக, கிறிஸ்டி நிறுவனத்தில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்றதால் அந்த நிறுவனம் இந்த ஆண்டு முட்டை டெண்டர் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால், முட்டை டெண்டரில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்கள் அளித்த நிறுவனங்களில் கிறிஸ்டி நிறுவனத்துக்கு நெருக்கமான மூன்று நிறுவனங்கள் பங்கேற்றிருந்தன. அவை தவிர, ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள், நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு சொசைட்டி உள்ளிட்டவையும் டெண்டருக்கு விண்ணப்பித்திருந்தன. கிறிஸ்டி நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியதால் அதிகாரிகள் ஒவ்வொரு நிறுவனத்திடமும் ஒவ்வொரு காரணம் சொல்லி டெண்டரை நிறுத்திவிட்டனர். இந்த நிலையில், கடந்த 20-ம் தேதி தமிழக அரசு தற்போது மீண்டும் முட்டை டெண்டர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

கோழிப் பண்ணை

`சென்னையில் வரும் செப்டம்பர் 5-ம் தேதி சத்துணவு முட்டை கொள்முதலுக்கு மண்டல அளவில் டெண்டர் விடப்படும்' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை நடைமுறையில் இருந்த மாநில அளவிலான டெண்டர் ரத்து செய்யப்பட்டு மண்டல அளவிலான டெண்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு டெண்டர் கோரப்படவுள்ளது. இதுதவிர, ஏற்கெனவே டெண்டரில் பங்கேற்கும் நிறுவனம் ஆண்டுக்கு 90 கோடி ரூபாய் அளவுக்கு வணிகம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையும் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், உணவுப்பொருள் தயாரிப்பு அல்லது முட்டை கோழிப்பண்ணை தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்க முடியும். நிறுவனத்தின் ஆண்டு வணிகம் 10 கோடி ரூபாய்க்குக் குறையாமல் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெண்டர் ஆறு மாதங்களுக்கு மட்டுமே நடைமுறையில் இருக்கும். ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முட்டை கொள்முதல் டெண்டர் குறித்து ஒருசில விதிமுறைகளை மாற்றம் செய்திருக்கும் தமிழக அரசுக்குப் பலரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

இதுகுறித்து நாமக்கல்லைச் சேர்ந்த பிரபல எஸ்.எம்.என். கோழிப்பண்ணையாளரான சத்தியமூர்த்தியிடம் பேசினோம். ``முட்டை கொள்முதல் குறித்த டெண்டரில் தமிழக அரசு விதிமுறைகளை மாற்றியிருப்பது வரவேற்கத்தக்கது. முதலில், இந்த டெண்டரில் அக்மார்க் உள்ளவர்களே பங்கேற்க முடியும். அதிலும், குறிப்பாகச் சிறு கோழிப் பண்ணையாளர்கள் யாரும் பங்கேற்க முடியாது. காரணம், அவர்கள் யாரும் இன்னும் அக்மார்க் பெறவில்லை. அரசின் இந்தத் தளர்த்தப்பட்ட விதிமுறைகளால் வருங்காலத்தில் அறிவிக்கப்படும் டெண்டரில், சிறு கோழிப் பண்ணையாளர்களும் அக்மார்க் முத்திரை பெற்று பங்கேற்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது'' என்றார், மிகத் தெளிவாக. 

இதுதொடர்பாகச் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், ``ஊடகங்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் கொடுத்த நெருக்கடி காரணமாகத் தமிழக அரசு முட்டைக் கொள்முதல் டெண்டரில் விதிமுறைகளை மாற்றம் செய்து அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது'' என்றார். 

மாற்றம், ஊழலுக்கு வழிவகுக்காமல் இருந்தால் சரிதான்....

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்