`இது அவர்களுக்கு மட்டும்தான்...' - போலீஸாரிடம் சிக்கிய பட்டதாரி கொடுத்த வாக்குமூலம்  | Chennai police arrested Youth with drugs

வெளியிடப்பட்ட நேரம்: 16:41 (22/08/2018)

கடைசி தொடர்பு:17:05 (22/08/2018)

`இது அவர்களுக்கு மட்டும்தான்...' - போலீஸாரிடம் சிக்கிய பட்டதாரி கொடுத்த வாக்குமூலம் 

போதை பொருள்களை விற்ற பட்டதாரி நிகில்திவாரி

 சென்னை திருவான்மியூரில் லேப் டாப் பேக்கில் போதைப் பொருள்களை வைத்திருந்த பட்டதாரி வாலிபர் போலீஸாரிடம் சிக்கியுள்ளார். அவரிடமிருந்து 3 லட்சம் ரூபாய் போதைப் பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். 

 சென்னை திருவான்மியூர் பகுதியில் போதைப் பொருள்கள் விற்கப்படுவதாகப் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி ஜெயசீலன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், ராமசுந்தரம், தமிழன்பன் ஆகியோர் கொண்ட போலீஸ் டீம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவான்மியூர் ராஜாஜி நகரில் லேப் டாப் பேக்குடன் சென்ற வாலிபர் போலீஸாரைப் பார்த்ததும் ஓட ஆரம்பித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார், அவரை விரட்டிப் பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தார். 

தொடர்ந்து அவரின் லேப் டாப் பேக்கை போலீஸார் சோதனைச் செய்தனர். அதில் உயர்ரக போதைப் பொருள்கள் இருந்தன. அதைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் போதைப் பொருள்களை வைத்திருந்தவரின் பெயர் நிகில் திவாரி என்று தெரிந்தது. அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

 போதை பொருள்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``எங்களிடம் சிக்கிய நிகில் திவாரி, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். எம்.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றிய அவர், தற்போது வேலையில்லாமல் திருவான்மியூர் பகுதியில் தங்கியுள்ளார். ஆன்-லைன் மூலம் போதைப் பொருள்களை விற்று வந்துள்ளார். அவரிடம் போதைப் பொருள்கள் வாங்குபவர்களில் பலர் ஐ.டி துறையில் பணியாற்றுபவர்கள். பார்ட்டிக்குச் செல்பவர்கள் ஆன் லைனில் ஆர்டர் கொடுத்ததும் டோர் டெலிவரியும் நிகில் திவாரி செய்துள்ளார். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு 3 லட்சம் ரூபாயாகும். போதைப் பொருள்கள் எங்கிருந்து கிடைக்கிறது என்று விசாரித்து வருகிறோம்" என்றனர். 

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``எம்டிஎம்ஏ, பிரவுன் எம்டிஎம்ஏ, எல்எஸ்டி, எக்ஸ்டஸி, எம்இடிஎச் ஆகிய போதைப் பொருள்களை பறிமுதல் செய்துள்ளோம். இவை, சாக்லேட் வடிவத்தில் இருப்பதால் யாருக்கும் சந்தேகம் வருவதில்லை. மேலும், பச்சை, மஞ்சள், வெள்ளை எனப் பல நிறங்களிலும் உள்ளன. போதைப் பொருள்களை எடைபோட்டுக் கொடுக்க சிறிய அளவில் இரண்டு எலெக்ட்ரானிக் கருவியை நிகில் திவாரி, லேப் டாப் பேக்கில் வைத்திருந்தார். அதையும் பறிமுதல் செய்துள்ளோம். அதோடு ஆன் - லைனில் ஆர்டரைப் பெற பயன்படுத்திய லேப் டாப், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நிகில் திவாரி, ஹைடெக்காக இந்த போதைப் பொருள்களை விற்றுவந்துள்ளார். இந்தப் போதைப் பொருள்களின் விலை அதிகம் என்பதால் பணக்காரர்கள் மட்டுமே இவரின் வாடிக்கையாளர்களாக இருந்துள்ளனர்" என்றார்.