`பெண் எஸ்.பி-யிடம் ரகசிய வாக்குமூலம்’ -  விசாகா கமிட்டி குழுவினர் தகவல் 

போலீஸ்


கடவுளின் பெயரைக் கொண்ட போலீஸ் ஐ.ஜி மீது பாலியல் புகார் கொடுத்த பெண் எஸ்.பி-யிடம் ரகசிய வாக்குமூலம் பெறப்படும் என்று விசாகா கமிட்டி குழுவினர் தெரிவித்தனர். 

தமிழக காவல்துறையில் சென்னை அலுவலகத்தில் பணியாற்றும் கடவுளின் பெயரைக் கொண்ட போலீஸ் ஐ.ஜி மீது பெண் எஸ்.பி ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின்பேரில் முதற்கட்ட விசாரணை நடந்துவருகிறது. இந்தப் புகார் தொடர்பாக ஏ.டி.ஜி.பி சீமா அகர்வால் தலைமையிலான விசாகா கமிட்டி உறுப்பினர்கள் நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர். இதையொட்டி, ராஜா அண்ணாமலையில் உள்ள மாநிலக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் சீமா அகர்வால் தலைமையில் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இந்தக் கூட்டத்தில் புகார் கொடுத்த பெண் எஸ்.பி மற்றும் போலீஸ் ஐ.ஜி ஆகியோரிடம் விசாரிப்பது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. 

இதுகுறித்து விசாகா கமிட்டியில் உள்ளவர்களிடம் பேசினோம்.``இந்தக் கமிட்டி நடத்தும் முதல் கூட்டத்தில் பெண் எஸ்.பி-யின் புகாரை முதலில் எடுத்து விசாரிக்கவுள்ளோம். புகார் தெரிவித்த பெண் எஸ்.பி, குற்றம் சுமத்தப்பட்ட போலீஸ் ஐ.ஜி ஆகியோரிடம் விசாரிப்பது தொடர்பான நாளை நடக்கும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். முதலில் பெண் எஸ்.பி கொடுத்த புகார் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தப்படும். அதற்கான தேதி கூட்டத்தில் முடிவு செய்யப்படும். விசாரணையின்போது பெண் எஸ்.பி அளிக்கும் தகவல்கள் வாக்குமூலமாகப் பதிவு செய்யப்படும். அதன் பிறகே போலீஸ் ஐ.ஜி-யிடம் விசாரிக்கப்படும். இருவரிடம் மட்டுமல்லாமல், அந்தப் பிரிவில் உள்ள இன்னும் சிலரிடமும் விசாரணை நடத்திய பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பெண் எஸ்.பி கொடுக்கும் வாக்குமூலம் ரகசியமாக வைக்கப்படும். அரசு மற்றும் காவல்துறையில் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்படுவோர்களின் புகார்களுக்கு இனி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!