எட்டு வழிச் சாலை... அவசியமா... அநாவசியமா? - அன்புமணி vs வைகைச்செல்வன் | Issue about 8 way lane from salem to chennai... Statements of various political leaders!

வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (22/08/2018)

கடைசி தொடர்பு:18:25 (22/08/2018)

எட்டு வழிச் சாலை... அவசியமா... அநாவசியமா? - அன்புமணி vs வைகைச்செல்வன்

18 கிராம சபைக் கூட்டங்களில், `இந்த எட்டு வழிச் சாலை எங்களுக்கு வேண்டாம்' என்று தீர்மானமே போட்டுள்ளார்கள். ஆனாலும் இந்தத் தீர்மானங்களை வெளிவிடாதவாறு ஆட்சியாளர்கள் தடுத்துக்கொண்டிருக்கும் கொடுமையும் நடந்துவருகிறது.

எட்டு வழிச் சாலை... அவசியமா... அநாவசியமா? - அன்புமணி vs வைகைச்செல்வன்

சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற உத்தரவு வெளியாகியிருப்பது, ஆளுங்கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களிடையே கருத்து கேட்கப்படாமல், அவசரம் அவசரமாக இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுவதாக ஆரம்பத்திலிருந்தே தமிழக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு நின்று ஆளுங்கட்சிக்கு எதிரான போராட்டங்களை நடத்திவருகிறது. `தமிழகத்தின் இயற்கை கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் உத்தியாகவே இந்த எட்டு வழிச் சாலைத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய பி.ஜே.பி அரசு முயற்சி செய்கிறது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பசுமை நிலங்களை அழித்துப் பாழ்படுத்தி, இப்படியொரு திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் மத்திய பி.ஜே.பி அரசின் சதிக்குத் தமிழக அரசும் உடந்தையாக இருக்கிறது' என்று சமூக நலன் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர். 

இந்நிலையில், எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்கும் விதத்தில், போராட்டக்காரர்கள் மீது பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது தமிழக அரசு. எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் வெளியிடக் கூடாது, கூட்டங்கள் நடத்தக் கூடாது, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்துப் பேசக் கூடாது எனப் பல்வேறு அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. இவற்றை மீறிய அரசியல் தலைவர்களை, `அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டுகின்றனர்' என்ற குற்றச்சாட்டைக் கூறி சிறையிலடைக்கும் முயற்சிகளும் தொடர்ந்து வருகின்றன.

அன்புமணி ராமதாஸ், எட்டு வழிச் சாலை

இந்நிலையில், எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்குத் தடை கேட்டு பூவுலகின் நண்பர்கள் அமைப்பும் பா.ம.க கட்சியும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. நேற்று நடைபெற்ற இவ்வழக்கு விவாதத்தின்போது, எட்டு வழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கும், மக்களை அப்புறப்படுத்துவதற்கும் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது உயர்நீதிமன்றம். ஒட்டுமொத்த தமிழகமும் இந்தத் திட்டத்துக்கு எதிராகக் கொதித்தெழுந்து வரும் சூழலில், நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு மக்கள் மனதில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்த பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், ``உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை என்பது பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஓர் ஆறுதலான செய்தி. எட்டு வழிச் சாலைக்குத் தடை கேட்டு நாங்கள் வழக்கு தொடர்ந்திருப்பதாலேயே நாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்பது கிடையாது. சேலம் - சென்னை இடையே ஏற்கெனவே 3 தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கும்போது, நான்காவதாக ஒரு புதிய நெடுஞ்சாலை ஏன் என்பதுதான் எங்கள் கேள்வி. 

`இந்த எட்டு வழிச் சாலை வந்துவிட்டால், இரண்டரை மணி நேரத்துக்குள் சேலத்திலிருந்து சென்னைக்கு வந்துவிடலாம்' என்று பொய்யான தகவல்களை தமிழக அரசு, மக்களிடையே தொடர்ந்து பரப்பிவருகிறது. 277 கிலோமீட்டர் தூரத்தை இரண்டரை மணி நேரத்துக்குள் கடக்க வேண்டும் என்றால், 120 கிலோமீட்டர் வேகத்தில்தான் பயணிக்க வேண்டும். அவ்வளவு வேகத்தில் பயணிப்பதற்கு உரிய சாலை, இந்தியாவிலேயே எங்கும் கிடையாது என்பதுதான் உண்மை. அடுத்ததாக இந்தச் சாலையே சேலத்திலிருந்து படப்பை வரைதான் போடப்படுகிறது. படப்பையிலிருந்து சென்னைக்குள் வருவதற்கே தனியாக ஒன்றரை மணி நேரம் தேவைப்படுமே...!

இந்தத் திட்டத்தின் மூலம் 7 ஆயிரம் ஏக்கர் நேரடியாகவும் 15 ஆயிரம் ஏக்கர் மறைமுகமாகவும் பாதிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். வாழ்வாதாரமாக இருக்கும் நிலத்தைப் பறிகொடுத்துவிட்ட துயரத்தில் இருக்கும் பொதுமக்களும் கடந்த 4 மாதங்களாகக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற பயம் அவர்களை வீட்டுக்கு வெளியே எங்கும் செல்லவிடாமல் முடக்கிப் போட்டுள்ளது. இது வீம்புக்காக வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் தமிழக அரசு செயல்படுத்திவரும் திட்டம் என்றே நாங்கள் கருதுகிறோம். 

வைகைச் செல்வன்

18 கிராம சபைக் கூட்டங்களில், `இந்த எட்டு வழிச் சாலை எங்களுக்கு வேண்டாம்' என்று தீர்மானமே போட்டுள்ளார்கள். ஆனாலும் இந்தத் தீர்மானங்களை வெளிவிடாதவாறு ஆட்சியாளர்கள் தடுத்துக்கொண்டிருக்கும் கொடுமையும் நடந்துவருகிறது. எட்டு வழிச் சாலை திட்டமே முழுமையாக ரத்து செய்யப்படும் தீர்ப்பு வரும்வரை நாங்கள் சட்டரீதியாகத் தொடர்ந்து போராடுவோம். அரசியல் ரீதியாகவும் இந்தப் போராட்டத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்ல இருக்கிறோம்'' என்றார். 

அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வனிடம் இடைக்கால உத்தரவு குறித்துப் பேசியபோது, ``உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரனே, `புதியத் திட்டங்கள் எல்லாவற்றையும் எதிர்ப்பது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல' என்ற கருத்தையும் தெரிவித்திருக்கிறார். ஏனெனில், சாலைப் பொருளாதார மேம்பாடுதான் உண்மையான மாற்றத்தைக் கொண்டுவரும். 

மொத்தமாக 1900 ஹெக்டேர் நிலம்தான் இந்தத் திட்டத்துக்கு தேவை. அதில், 400 ஹெக்டேர் மட்டுமே விளைநிலம். அடுத்த 400 ஹெக்டேர் அரசு நிலம். மற்றவை ஏதோ ஒருகாலத்தில் விவசாயம் செய்யப்பட்ட நிலங்கள்தாம். ஆனால், எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பல கட்டுக்கதைகளை மக்களிடையே பரப்பிவருகிறார்கள். அதாவது, 900 அடி அகலம் கொண்டது இந்தச் சாலை என்கிறார்கள். இது உண்மையில்லை... வெறும் 256 அடி அகலம் மட்டும்தான். இதற்குள்ளாகவே சர்வீஸ் ரோடும் வந்துவிடுகிறது. அடுத்ததாக, அடர்ந்த வனப்பகுதிக்குள் 22 கி.மீ காடுகளை அழிக்கவிருப்பதாக வாட்ஸ் அப் செய்தி பரப்புகிறார்கள். அது தவறு... வெறும் 10 கி.மீ மட்டும்தான் காப்புக் காடுகள் வழியாகச் செல்கிறது. 10 கி.மீ சுரங்கப்பாதை அமைக்கப்போவதாகவும் எதிர்க்கட்சியினர் செய்தி பரப்பி வருகிறார்கள். அதுவும் உண்மையில்லை... வெறும் 3 கி.மீ. மட்டும்தான். எந்த மலையையும் உடைக்கப் போவதில்லை. மலைக்குகைதான் அமைக்கப்போகிறார்கள்.

ஜப்பான் நாட்டுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு மலையை உடைத்து மக்னீசியம் உள்ளிட்ட கனிம வளங்களை கொள்ளையடிக்கப்போவதாகவும் சொல்கிறார்கள். இதுவும் பொய். ஜப்பான் நாட்டுடன் தொழிற்பூங்கா அமைக்கத்தான் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதுவும் மகாபலிபுரம் பகுதியில்தான். 18 கிராம சபைக் கூட்ட தீர்மானங்களில், `போதுமான இழப்பீடு வேண்டும்' என்று கேட்கிறார்கள். அதுகுறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. 

சென்னை - பெங்களூரு சாலையில் தற்போது 60 ஆயிரம் வாகனங்கள் பயணிக்கின்றன. இது 150 விழுக்காடு போக்குவரத்து ஆகும். இன்னும் 15 வருடங்களில், இந்த விகிதம் இன்னும் அதிகரிக்கும். இதற்கு மாற்றாக சென்னை - சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துவிட்டால், சென்னை - பெங்களூரு சாலையில் வாகனப் போக்குவரத்து பெருமளவு குறைந்துவிடும். எனவே, எப்படிப் பார்த்தாலும், எட்டு வழிச் சாலை என்பது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவிர்க்கமுடியாததொரு திட்டம்!'' என்கிறார்.
இறுதித் தீர்ப்புக்காகக் காத்திருப்போம்!


டிரெண்டிங் @ விகடன்