வெளியிடப்பட்ட நேரம்: 18:29 (22/08/2018)

கடைசி தொடர்பு:18:29 (22/08/2018)

கவிதை: மகிழ்ச்சியான பன்றிக்குட்டி... நாவல்: கர்ப்ப நிலம்... 2017-18-ன் சிறந்த நூல்கள் அறிவிப்பு!

2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் பல்வேறு பிரிவுகளில் விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னை புத்தகத் திருவிழாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மிழ் நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்தின் சார்பில் சென்னையில் புத்தகத் திருவிழா, 4-வது ஆண்டாகச் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. ஆகஸ்ட் 17 முதல் 27 வரை நடைபெறும் இந்தப் புத்தகக் காட்சியில் 200-க்கும் மேற்பட்ட அரங்குகளும் அகில இந்திய அளவில் பதிப்பகங்களும் பங்குபெற்றுள்ளன. கடந்த பல ஆண்டுகளாக அரசு நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்காத நிலையில் தமிழ்ப் பதிப்புலகம் மிகவும் நொடிந்த நிலையில் உள்ளது. இந்தத் துறையின் வளர்ச்சி, இப்போது வாசகர்களை மட்டுமே நம்பியுள்ளது. இதை மேம்படுத்தவும், பள்ளி, கல்லூரி மாணவர்களையும் இளைஞர்களையும் மையப்படுத்தி இந்தப் புத்தகத் திருவிழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை புத்தகத் திருவிழா 

இங்கு கவிதை வாசிப்பு, கருத்தரங்கம், நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகள், சமீபத்தில் மறைந்த தி.மு.க தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு அஞ்சலி நிகழ்ச்சி உட்பட  ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. இதன் ஒரு பகுதியாக  2017 - 2018 ஆண்டில் வெளியான நூல்களுக்கு விருது வழங்கும் விழாவும் நடத்தப்படவுள்ளது. அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களுக்கு, வரும் 27-ம் தேதி தமிழகக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விருதையும் பரிசையும் வழங்கவுள்ளார்.

விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களின் விவரம்...

சிறந்த நாவல் - குணா கவியழகன் எழுதி அகல் பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்ட `கர்ப்ப நிலம்’.

சிறந்த சிறுவர் இலக்கிய நூல் - பாரதி புத்தகாலயம் வெளியிட்ட யெஸ்.பாலபாரதி எழுதிய `புதையல் டைரி’.

சிறந்த சிறுகதை நூல் - உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட மனோஜ் எழுதிய `அப்சரஸ்'.

சிறந்த கவிதை நூல் - வெய்யில் எழுதிய `மகிழ்ச்சியான பன்றிக்குட்டி’.

சிறந்த கட்டுரைத் தொகுப்பு - காலச்சுவடு வெளியிட்ட ஆ.திருநீலகண்டன் எழுதிய `நீடாமங்கலம் சாதிய கொடுமையும் திராவிட இயக்கமும்’.

சிறந்த மொழிபெயர்ப்புச் சிறுகதை - ஸ்ரீ செண்பகா பதிப்பகம் வெளியிட்ட லியோ ஜோசப் எழுதிய `இந்திய மொழிச் சிறுகதைகள்’.

சிறந்த பெண்ணிய நூல் - அ.வெண்ணிலா எழுதி அகநி பதிப்பகம் வெளியிட்ட `எங்கிருந்து தொடங்குவது’.

சிறந்த கல்வியியல் நூல் - பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ஆயிஷா இரா.நடராசனின் `இந்திய கல்விப் போராளிகள்’.

சிறந்த வரலாற்று நூல் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட ந.முத்துமோகனின் `இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்’.

சிறந்த சூழலியல் சார்ந்த புத்தகம் - இந்து தமிழ் திசை பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்ட ந.வினோத் குமார் எழுதிய `வேட்டைக்கார ஆந்தையின் தரிசனம்’ உட்பட பத்துப் பிரிவுகளில் பல்வேறு நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள்

2016-2017-ம் ஆண்டில் வெளிவந்த நூல்களிலிருந்து விருதுக்கான நூல்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் சில நூல்கள் 2016-க்கு முன் வெளிவந்த நூல்கள். இதைப் பற்றி புத்தகத் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர் நாகராஜனிடம் கேட்டபோது ``இந்த ஆண்டில் வெளிவந்த மறுபதிப்பு நூல்களையும் பரிந்துரைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன” என்றார். பொதுவாக, விருது வழங்கும் நடைமுறையில் மறுபதிப்பு நூல்களைக் கவனத்தில் கொள்வதில்லை. ஆனால், இவர்கள் வெளியிட்டுள்ள பட்டியலில் `மறுபதிப்பு நூல்களையும் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளோம்' என்று கூறியிருப்பது புது நடைமுறையாக இருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்