வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (22/08/2018)

கடைசி தொடர்பு:20:20 (22/08/2018)

``58 கிராம பாசனக் கால்வாய்!” - பெயர்க்காரணமும் 50 ஆண்டுக்கால போராட்ட வரலாறும்!

`58 கிராம பாசனக் கால்வாய்!’ – போராட்டமும் வெற்றியும்...

``58 கிராம பாசனக் கால்வாய்!” - பெயர்க்காரணமும் 50 ஆண்டுக்கால போராட்ட வரலாறும்!

வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 58 கிராமங்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் கொண்டுசெல்வதற்காக அமைக்கப்பட்டதால், இதற்கு `58 கிராமப் பாசனக் கால்வாய்’ என்று பெயர் வந்தது. கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த கால்வாய் அமைக்கும் பணி தற்போது முடிவடைந்துள்ளதால், சோதனை அடிப்படையில் இன்று அக்கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. வைகை அணையின் வலதுபுற கரையில் உள்ள கால்வாய் மதகை துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்துவைத்தார். உடன், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் இருந்தனர். 

கால்வாய்

அரை நூற்றாண்டு காலப் போராட்டம்:

வைகை அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரானது, வெள்ளமெனப் பெருக்கெடுத்து ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்குச் சென்று சேர்ந்து பின்னர் வங்கக்கடலில் கலக்கும். வழியெங்கிலும் உள்ள பல லட்சம் ஏக்கர் பாசனப்பகுதிகள் இதனால் பயன்பெறும். இதற்கு அப்படியே நேர் எதிராக, குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல், வானம்பார்த்த பூமியாக இருந்தது உசிலம்பட்டி பகுதி கிராமங்கள். வைகை ஆற்றை ஒட்டிய பகுதி மட்டுமல்லாது, பல பகுதிகள் பயன்பெற வேண்டுமென்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட கோரிக்கைதான் திருமங்கலம் பிரதான கால்வாயை தங்கள் பகுதிக்கு நீட்டிக்க வேண்டும் என்பதும். இதற்கு வைகை அணை பாசன விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. தொடர்ந்து, கிராமத்தினர் போராட்டத்தில் இறங்குகிறார்கள். 60 களில் ஆரம்பித்த போராட்டங்கள், 80 களின் இறுதியில் தீவிரமடைய ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் கிராமங்களுக்குத் தண்ணீர் கொண்டுவர அரசு சம்மதித்தது. 1996 ம் ஆண்டு திட்டத்துக்கான ஒப்புதலும் வழங்கப்பட்டு, 1999 ம் ஆண்டு பணிகளும் தொடங்கின. மொத்தம் 58 கிராமங்கள் போராடி திட்டத்தைக் கொண்டுவந்ததால் இத்திட்டத்துக்கு 58 கிராம பாசனக் கால்வாய் திட்டம் எனப் பெயர் வைக்கப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம்

உபரி நீர் மட்டுமே 58 கிராமங்களுக்குச் செல்லும்:

உசிலம்பட்டி பகுதி கிராமங்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்துக்கு வைகை ஆற்றுப் பாசன விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்குப் பதிலளித்த 58 கிராம விவசாயிகள், `வைகை அணை நிறையும் போது, திறந்துவிடப்படும் உபரி நீர் கடலில் கலக்கிறது. அந்த நீரை மட்டும் எங்களுக்குக் கொடுங்கள். வேறு எதுவும் வேண்டாம். உங்கள் உரிமையில் நாங்கள் எப்போதும் தலையிட மாட்டோம்’ என்றனர். இதைப் புரிந்துகொண்ட வைகை ஆற்றுப் பாசன விவசாயிகள், அணையிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீரை 58 கிராமங்களுக்குத் கொடுக்க சம்மதித்தனர். கூடவே, நிலக்கோட்டைப் பகுதி பாசனத்துக்கு இந்தக் கால்வாயிலிருந்து தண்ணீர் செல்கிறது.

வைகை அணையின் வலதுபுறக் கரைப் பகுதியில் உள்ள 58 கிராம பாசனக் கால்வாய் மதகிலிருந்து 27.735 கிலோ மீட்டர் தூரம் பிரதான கால்வாய் அமைந்துள்ளது. அதைத் தொடர்ந்து, உத்தப்ப நாயக்கனூரில் இரு கால்வாய்களாக பிரித்து 11.925 கிலோமீட்டர் தூரம் இடப்பக்கமும், 10.24 கிலோமீட்டர் தூரம் வலப்பக்கமும் கால்வாய் அமைந்துள்ளது. இப்பாதைகளின் இடையில் மலை மற்றும் காட்டுப்பகுதிகள் இருப்பதால், மூன்று இடங்களில் தொட்டிப் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெறும் ஐந்து ஆண்டுகளில் முடிக்க வேண்டிய பணிகள் தாமதம் ஆவதற்கு இந்தத் தொட்டிப் பாலத்தின் கட்டுமானங்களும் ஒரு காரணம் என்றே கருதப்படுகிறது.

58 கிராம பாசனக் கால்வாய் மூலமாக 228.86 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். வைகை அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவான 69 அடியை எட்டியதைத் தொடர்ந்து பெரியாறு பாசனப்பகுதி மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாய் பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று, சோதனை அடிப்படையில் 58 கிராமப்பாசனக் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இனி வரும் காலங்களில், வைகை அணை நிறையும் போது வெளியேற்றப்படும் உபரி நீரானது 58 கிராம பாசனக் கால்வாய் மூலம் திறந்துவிடப்படும். இதனால், உசிலம்பட்டி பகுதி கிராமத்தினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.


டிரெண்டிங் @ விகடன்

அதிகம் படித்தவை