வெளியிடப்பட்ட நேரம்: 21:42 (22/08/2018)

கடைசி தொடர்பு:21:54 (22/08/2018)

`செப்டம்பர் 5-ம் தேதி நடக்கும் பேரணிக்குப் பின்னர் தெரியும்!’ - அழகிரி காட்டம்

`தி.மு.க-வில் என்னை இணைப்பது போன்று தெரியவில்லை. பேரணி பற்றிக் கேளுங்கள் என்றால் ஊரணியைப் பற்றிக் கேட்கிறீர்கள்’ என மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க அழகிரி காட்டமானார்.

அழகிரி

முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து தி.மு.க-வின் செயல்பாடு எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் ஆகஸ்ட் 13-ம் தேதி மு.க.அழகிரி, குடும்பத்துடன் கருணாநிதி சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர், `தி.மு.க-வின் உண்மையான விசுவாசிகள் என்னுடன்தான் இருக்கிறார்கள்’ என்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்து கொந்தளித்தார் அழகிரி.

இந்நிலையில் இன்று மாலை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் மு.க.அழகிரி. அவர் பேசுகையில், "செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் நடைபெறுகிற பேரணியில் 1 லட்சம் தொண்டர்கள் கலந்துகொள்வார்கள். எனது மனக் குமுறலை நேரம் வரும்போது வெளிப்படுத்துவேன். என்னை தி.மு.க-வில் இணைப்பதுபோல் தெரியவில்லை. என்னை தி.மு.க-வில் இணைக்கவில்லை என்றால் பேரணிக்குப் பின் முடிவெடுக்கப்படும். அண்ணா சிலையிலிருந்து பேரணி தொடங்க அனுமதி கோரியுள்ளோம். அவர்கள், திருவல்லிக்கேணி டி காவல் நிலையத்திலிருந்து பேரணிக்கு அனுமதி அளித்துள்ளனர்’’ என்றார். தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் பக்கம்தான் அதிக நிர்வாகிகள் இருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அழகிரி, ``பேரணி குறித்து கேட்பீர்கள் என்று நினைத்தால், ஊரணி குறித்து கேட்கிறீர்கள்’’ என்று காட்டமானார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க