வெளியிடப்பட்ட நேரம்: 11:05 (23/08/2018)

கடைசி தொடர்பு:11:05 (23/08/2018)

நட்பு வினையாது! நிலம் வாங்கித் தருவதாகக் கூறி ஒரு கோடி ரூபாய் அபேஸ் செய்தவர் கைது!

நிலம் வாங்கித் தருவதாக கூறி ஒரு கோடியை ஏமாற்றியவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உடந்தையாக இருந்த மற்றொருவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மூர்த்தி

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே உள்ளது சிங்க சமுத்திரம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் திருப்பூர் அருகே மங்களம் பகுதியில் பழனிச்சாமி என்பவரோடு சேர்ந்து 2016-ம் ஆண்டு அரிசி வியாபாரம் செய்து வந்தார். அங்கு ஓட்டுநராக வேலை பார்த்த மூர்த்தியுடன் சண்முகத்துக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்போது திருப்பூரில் விவசாய நிலம் வாங்கித் தருவதாக மூர்த்தி கடந்த 2016-ம் ஆண்டு சண்முகத்திடம் ஒரு கோடியே பத்து லட்ச ரூபாய் வாங்கினார். சண்முகத்தின் நண்பர் நடராஜன் என்பவரும் சண்முகத்திடம் நாற்பது லட்சம் பணம் வாங்கி உள்ளார். ஆனால், தற்போது வரை இவர்கள் இருவரும் நிலம் வாங்கித் தரவே இல்லை. இது தொடர்பாக இவர்களிடம் சண்முகம் பலமுறை பணம் கேட்டும் தரவில்லை. இது தொடர்பாக சண்முகம் கடந்த வருடம் திருவள்ளூர் மாவட்ட குற்றப் பிரிவில் புகார் செய்தார்.

இந்தப் புகாரின் பேரில் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி பொன்னி உத்தரவின் பேரில் டி.எஸ்.பி கண்ணப்பன் தலைமையில் தனிப்படை அமைத்து திருப்பூர் சென்று மூர்த்தியை போலீஸார் கைது செய்து திருவள்ளூர் கொண்டு வந்தனர். மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள நடராஜனை போலீஸார் தேடிவருகின்றனர்.