`கார்டனுக்குக் கொடுத்ததை இங்கே கொடுங்கள்!'- அமைச்சர்களைச் சீண்டிய அ.தி.மு.க தலைமை  | Clash between edappadi palanisamy and ADMK higher official

வெளியிடப்பட்ட நேரம்: 11:23 (23/08/2018)

கடைசி தொடர்பு:11:23 (23/08/2018)

`கார்டனுக்குக் கொடுத்ததை இங்கே கொடுங்கள்!'- அமைச்சர்களைச் சீண்டிய அ.தி.மு.க தலைமை 

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் மூத்த அமைச்சர் ஒருவருக்கும் இடையே முட்டல் மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 'கட்சிக்கு நிதி அளிப்பது தொடர்பாகத்தான் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கரம் வலுவாக இருப்பதால், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒதுக்கப்பட்டுவிட்டனர். இந்த இரண்டு தரப்புக்கும் இடையே நடக்கும் மோதல்களால் கவலையில் ஆழ்ந்துள்ளனர் கட்சியின் சீனியர்கள். இதில், பன்னீர்செல்வத்தை நம்பியவர்களுக்குக் கட்சியில் எந்தவித முக்கியத்துவமும் கிடைப்பதில்லை என்று குற்றச்சாட்டு வெளிப்படையாகவே உள்ளது. இந்நிலையில், அண்மையில் நடந்த வருமான வரித்துறை சோதனையால், மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளது அ.தி.மு.க மேலிடம். இந்தச் சோதனையில் கணக்கில் வராத ஏராளமான தொகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனால் அ.தி.மு.க தலைமைக்கு வேண்டியவர்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். 

அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகி ஒருவர் கூறுகையில், ``வருமான வரித்துறை சோதனையில் ஆளுங்கட்சியின் முக்கியப் பதவியில் இருக்கும் ஒருவருக்குச் சொந்தமான பெரிய தொகை சிக்கியுள்ளது. அந்தத் தொகையைத்தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்த அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால், அந்தத் தொகை முழுமையாகச் சிக்கிவிட்டதால், அடுத்து என்ன செய்யலாம் என்று கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். ஆனால், எந்தவித முடிவும் எட்டப்படாத நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிரடி முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சர்களைத் தொடர்புகொண்ட நபர் ஒருவர், 

'முந்தைய காலகட்டங்களில் கார்டனுக்கு எனத் தனிப்பட்ட முறையில் நிதி கொடுத்து வந்தோம். இனி வரக் கூடிய காலகட்டங்களில் கட்சித் தலைமைக்கும் அதேபோல் கொடுங்கள்' எனத் சூசகமாகத் தெரிவித்திருக்கிறார். இதை எதிர்பார்க்காத வடமாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், 'எங்களால்தான் சிலர் பதவியில் நீடிக்கின்றனர். எதற்காகப் பணம் தர வேண்டும்' எனக் கொதித்திருக்கிறார். இதையடுத்து, அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களிடமும் அந்த நபர் பேசியுள்ளார். வடமாவட்ட அமைச்சர் போலவே, மற்றவர்களும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஒருவரிடமும் சரியான பதில் கிடைக்காததால், கட்சி நிர்வாகிகளிடம்  சமரசம் பேசும் வேலையைத் தொடங்கியுள்ளனர். இன்னும் நிலைமை சுமுகமடையவில்லை" என்றார். 


[X] Close

[X] Close