வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (23/08/2018)

கடைசி தொடர்பு:13:15 (23/08/2018)

மனைவியை மாற்றிய வங்கி... அதிர்ச்சியடைந்த கணவர்... அதிகாரிகளுக்கு அபராதம் விதித்த நீதிமன்றம் 

வங்கி மோசடி


நெல்லை மாவட்டத்தில் ஆட்டோவுக்கு லோன் வாங்கிய டிரைவரின் மனைவியின் பெயரை மாற்றிய வங்கி அதிகாரிகள், காப்பீடு நிறுவன மேலாளர் ஆகியோருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. 

நெல்லை மாவட்டம், நாங்குநேரியைச் சேர்ந்தவர் ஐயப்பன். ஆட்டோ டிரைவர். இவர், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ஆட்டோ வாங்க லோன் வாங்கினார். அவரின் வங்கிக் கணக்கிலிருந்து 1,323 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஐயப்பன், வங்கி மேலாளரை நேரில் சந்தித்து பணம் பிடித்தம் செய்யப்பட்டது குறித்து விளக்கம் கேட்டார். அதற்கு வங்கி மேலாளர், காப்பீட்டுத் தொகைக்காக பணம் பிடிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இதையடுத்து காப்பீட்டுப் பத்திரத்தை ஐயப்பன் கேட்டுள்ளார். அதைப்பார்த்ததும் அவர் அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் காப்பீடு பத்திரத்தில் அவரின் மனைவி பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து வங்கி தரப்பில் அவர் தெரிவித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

 இதனால் ஐயப்பன், நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பிரம்மா ஆஜராகிவழக்கறிஞர் பிரம்மா வாதாடினார். வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றத் தலைவர் நாராயணசாமி  மற்றும் உறுப்பினர் சிவமூர்த்தி ஆகியோர் அதிரடி உத்தரவை பிறப்பித்தனர். அதில், மனுதாரிடம் அனுமதி பெறாமல் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்தது முறையற்ற செயல். மேலும் காப்பீட்டுப் பத்திரத்தில் வாரிசுதாராக மனுதாரர் மனைவியின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது சேவை குறைபாடு என்பதால் வங்கிக் கிளை மேலாளர், பொது மேலாளர் மற்றும் காப்பீட்டு நிறுவன பொது மேலாளர் ஆகியோர்  சேர்ந்து மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்டஈடாக  5,000 ரூபாயும் வழக்கு செலவுக்கு 3,000 ரூபாயும் என மொத்தம் 8,000 ரூபாயை ஒரு மாதத்தில் வழங்க வேண்டும். பணத்தை செலுத்தத் தவறினால் 6 சதவிகித வட்டியுடன் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கறிஞர் பிரம்மா கூறுகையில், ``ஐயப்பனின் மனைவியின் பெயர் முத்துலட்சுமி. ஆனால் காப்பீடு பத்திரத்தில் வள்ளியம்மாள் என்று தவறுதலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஐயப்பனின் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், மனுதாரரின் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் தொகையை வங்கி நிர்வாகம் பிடித்துள்ளது. இந்த வழக்கில் வங்கியின் கிளை மேலாளர், பொது மேலாளர், காப்பீடு நிறுவனத்தின் பொது மேலாளர் ஆகியோருக்கு அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது" என்றார்.