ஓட்டுநர் கண் அசந்த அந்த நிமிடம்... காவிரியில் பாய்ந்த கன்டெய்னர்... பறிபோன உயிர்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காவிரி ஆற்று மேம்பாலத்தில் இன்று அதிகாலை சினிமா காட்சியைப்போல தலை குப்புற ஒரு மினி கன்டெய்னர் லாரி ஆற்றுக்குள் விழுந்தது. 

விபத்து

சென்னை கிண்டியில் மகாலட்சுமி கார்கோ என்ற கூரியர் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான மினி கன்டெய்னர் லாரியில் கூரியர் பார்சல்களை ஏற்றிக்கொண்டு டிரைவர் சிவக்குமார் என்பவர் கோவைக்குச் சென்றிருக்கிறார். பவானி லட்சுமிநகர் டு  சேலம் செல்லும் சாலையில் உள்ள குமாரபாளையம் காவிரி ஆற்று மேம்பாலத்தில் விடியற்காலையில் வரும் போது ஓட்டுநர் கண் அசந்ததால் வாகனம் மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரை இடித்துக்கொண்டு ஆற்றுக்குள் விழுந்தது.

விபத்து

இதில்  டிரைவர் சிவக்குமார் தண்ணீருக்குள் மூழ்கி மூச்சுத் திணறி இறந்தார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள்  குமாரபாளையம் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் லாரியை கிரைன் மூலம் வெளியே எடுத்தார்கள். 

இதைப்பற்றி மகாலட்சுமி கார்கோ கூரியர் நிறுவனத்தின் உரிமையாளர் சாந்தியிடம் பேசிய போது, ``எங்க சென்னை கூரியர் அலுவலகத்திலிருந்து கோவை அலுவலகத்துக்கு டிரைவர் சிவக்குமார் என்பவர் நேற்று இரவு கூரியர் ஏற்றிக்கொண்டு வந்தார். அவர் கோவை செல்லும் வழியில் குமாரபாளையம் மேம்பாலத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிவக்குமார் அனுபவம் உள்ள சீனியர் டிரைவர்தான். எப்படி நடந்தது என்று தெரியவில்லை. டிரைவர் சிவக்குமார் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர். அவருடைய குடும்பத்துக்குத் தகவல் சொல்லியிருக்கிறோம். தற்போது சம்பவ இடத்துக்குச் சென்றுகொண்டிருப்பதால் மேற்கொண்டு முழுமையான தகவல்கள் தெரியவில்லை'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!