`எனக்கு ரேட் பிரச்னையில்லை; ரிச்சா வேணும்!' - குடும்ப செட்டப்பில் நடக்கும் பாலியல் தொழில்

https://www.vikatan.com/news/tamilnadu/12160.html

சென்னை புறநகர் பகுதியில் குடும்ப செட்டப்பில் பாலியல் தொழில் நடக்கிறது. இதற்கு, போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 
 
சென்னை புறநகர் பகுதியில் வேகமாக வளர்ச்சியடையும் நகர் அது. அந்தப் பகுதியில் தனி பங்களா டைப் வீடுகளும் அடுக்குமாடி குடியிருப்புகளும் அதிகளவில் உள்ளன. வி.ஐ.பி-க்கள், அரசு ஊழியர்கள், தொழிலதிபர்கள் எனப் பலர் குடியிருந்து வருகின்றனர். அதில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடப்பதாகத் தகவல் கிடைத்ததும் அதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு சமூக ஆர்வலர்கள் சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், போலீஸ் தரப்பிலிருந்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், பாலியல் தொழில் நடக்கும் வீட்டுக்குள் வாடிக்கையாளர்போல செல்லும் நபர், அதை ரகசிய கேமரா மூலம் வீடியோவாக எடுத்தார். 6 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் இடம்பிடித்த காட்சிகள் இதோ.

சொகுசு கார் ஒன்று அடுக்குமாடி குடியிருப்பு முன் நிற்கிறது. காரை விட்டு இறங்கும் நபர், பாலியல் தொழில் நடக்கும் வீட்டுக்குள் நுழைகிறார். அவரை அங்குள்ள பெண்கள் அன்போடு வரவேற்கின்றனர். தொடர்ந்து அந்த வீட்டில் உள்ள பெண்களும் அந்த நபரும் பேசிக் கொள்கின்றனர். 

 பெண்கள்: ``வாங்க... நீங்கள் யாரு?’’ 

ஆண் குரல்: ``என்னோட ஃப்ரெண்ட்தான் உங்கள் நம்பர் கொடுத்தார். உங்களை வேறு எங்கோ பார்த்த மாதிரி இருக்கே..?’’

 பெண்கள்: ``சீரியலில் பார்த்திருப்பீர்கள். உங்களுக்கு எந்த மாதிரியாக வேண்டும்?’’ 

ஆண் குரல்: ``சிவப்பா அழகா, ரிச்சா வேண்டும்.’’

`கலராக வேண்டுமா’ என்று சொல்லிக்கொண்டே பெண் ஒருவர் சிரிக்கிறார். சிறிது அமைதிக்குப் பிறகு ஒரு பெண்ணைக் கை காட்டிய நபர், 2,000 ரூபாயா என்று கேட்கிறார்.

 பெண்கள்: ``ஆமாம்.’’

ஆண் குரல்: ``ரேட் எனக்குப் பிரச்னையில்லை.’’

 பெண்கள்: ``நீங்கள் விரும்பும் பெண்கள் இருந்தால் சொல்கிறேன்.’’ 

ஆண் குரல்: ``இன்னொரு நாள் கண்டிப்பாக வருகிறேன்.’’ 

அடுத்து, ஒரு பெண்ணை சந்திக்க வேண்டும் என்று வாடிக்கையாளர் சொல்ல அவரை இப்போது சந்திக்க முடியாது என்று பெண் ஒருவர் சொல்கிறார்.

ஆண் குரல்: ``நீங்கள் வடபழனியா... சினிமாவில் நடிக்கிறீர்களா?’’ 

பெண்: `பூந்தமல்லி’ என்று சிரித்தபடியே அந்தப் பெண் வீட்டுக்குள் செல்கிறார். ஆண் நபரை வீட்டின் வாசல் வரை சில பெண்கள் வழியனுப்பி வைக்கின்றனர். பிறகு, அந்த ஆண் நபர் அங்கிருந்து புறப்பட்டுச் செல்வதுடன் அந்த வீடியோ முடிவடைகிறது. வீடியோவில் குழந்தைகள் அழும் குரலும் கேட்கிறது. 

இந்தத் தகவலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள விபசார தடுப்புப் பிரிவு போலீஸாரின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். வீடியோ குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகப் போலீஸார் தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!