`நானாக வெளியேறவில்லை!'- அழகிரி பேட்டி

அமைதியாக இருந்த அழகிரி, கருணாநிதியின் மறைவுக்குப் பின் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடத்தொடங்கியுள்ளார். இன்று மதுரை, விருதுநகர், நாமக்கல் என்று பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

அழகிரி

சென்னையில், செப்டம்பர் 5-ம் தேதி தன் ஆதரவாளர்களைத் திரட்டி பேரணி நடத்த ஏற்பாடுசெய்துவரும் நிலையில், சென்னையிலிருந்து நேற்று மாலை மதுரைக்கு வந்த அழகிரி, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அதிரடியாகப் பேசிவிட்டுக் கிளம்பினார். இன்று காலை விருதுநகர் மாவட்டம் திருச்சுழிக்குச் சென்று, தன்னுடைய  ஆதரவாளர் இல்ல திருமண நிகழ்ச்சியில்  கலந்துகொண்டு மணக்களை வாழ்த்தினார். அங்கு செய்தியாளர்களிடம், "தி.மு.க-விலிருந்து என்னை வெளியேற்றிவிட்டார்கள். நானாக கட்சியிலிருந்து வெளியேறவில்லை. வரும் 5-ம் தேதி, சென்னையில் தலைவர் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக அமைதி ஊர்வலம் நடைபெறும்" என்று கூறினார்.

அடுத்து மதுரை வந்தவர், முன்னாள் அரசு வழக்கறிஞரும், அவருடைய ஆதரவாளருமான மோகன்குமார் இல்லத்துக்குச் சென்று, அவர் தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறினார். அதைத் தொடர்ந்து, கருணாநிதிக்கு அஞ்சலிசெலுத்த சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த, துரை என்பவரின் இல்லத்துக்குச் சென்று அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு நாமக்கல் நிகழ்ச்சிக்குக் கிளம்புவதாக ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!