`நள்ளிரவுக்குள் வீட்டை காலி செய்துவிட்டு கிளம்பிவிடணும்' ஜிம் டிரெயினருக்கு ஏ.டி.ஜி.பி மிரட்டல் | ADGP threatens Gym trainer

வெளியிடப்பட்ட நேரம்: 15:57 (23/08/2018)

கடைசி தொடர்பு:15:57 (23/08/2018)

`நள்ளிரவுக்குள் வீட்டை காலி செய்துவிட்டு கிளம்பிவிடணும்' ஜிம் டிரெயினருக்கு ஏ.டி.ஜி.பி மிரட்டல்

காரை சேதப்படுத்தியதால் போலீஸ் நிலையத்தில் புகார்

`போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்கச் சென்ற  ஜிம் டிரெயினரை நள்ளிரவுக்குள் வீட்டை காலிச் செய்துவிட்டு கிளம்பிவிடுங்கள்'' என்று போலீஸ் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். 

 சென்னை பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சாலமோன். இவர் ஜிம்டிரெயினராக உள்ளார். இவர், காரை மர்மநபர்கள் உடைத்தனர்.  இதுகுறித்து நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 

 இதுகுறித்து சாலமோனிடம் பேசினோம், ``சம்பவத்தன்று என்னுடைய காரை வீட்டின் அருகில் உள்ள பொது இடத்தில் நிறுத்தினேன். அப்போது, காரை நிறுத்துவதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் பணம் கேட்டார். நான் பணம் கொடுக்கவில்லை. இதனால் பிரகாஷ், தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து என்னுடைய காரை சேதப்படுத்தினார். இதுகுறித்து நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அதன்பிறகு, என்னுடைய வீட்டுக்குள் நுழைந்த பிரகாஷ் மற்றும் அவரின் நண்பர்கள் என்னையும் என் மனைவியையும் சரமாரியாகத் தாக்கினர். அதோடு கொலை மிரட்டலும் விடுத்தனர். இந்தத் தகவலையும் போலீஸாரிடம் தெரிவித்தேன். விசாரணைக்குப் பிறகு எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்" என்றார். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஜிம்டிரெயினர் சாலமோன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்துள்ளோம். அவரின் காரை உடைத்த பிரகாஷ் மற்றும் அவரின் நண்பர்களிடம் விசாரணை நடந்துவருகிறது. இந்தப் புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்காமலிருக்க பல தரப்பிலிருந்து எங்களுக்கு பிரஷர் வந்துள்ளது. குறிப்பாக போலீஸ் ஏ.டி.ஜி.பி ஒருவர், எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதனால்தான் அமைதியாக இருக்கிறோம். அதே நேரத்தில் புகார் கொடுத்த சாலமோனுக்கு ஆதரவாகவும் சிலர் பேசியதால் எப்.ஐ.ஆர் மட்டும் பதிவு செய்துள்ளோம்" என்றனர். 

 இதுகுறித்து நீலாங்கரை போலீஸாரிடம் கேட்டதற்கு, ``புகாரின் பேரில் விசாரணை நடந்துவருகிறது. ஏ.டி.ஜி.பி தரப்பிலிருந்து எந்த சிபாரிசும் வரவில்லை" என்றனர். 

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``காரை சேதப்படுத்தியவர்களில் ஒருவர் டிரைவர். அந்த டிரைவர் வேலைபார்க்கும் இடத்தின் உரிமையாளரின் தம்பிதான் ஏ.டி.ஜி.பி. அவர் என்ன நடந்தது என்று விசாரித்தார். இதற்கிடையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள அரசு வழக்கறிஞர் ஒருவர், எப்.ஐ.ஆர் பதிவு செய்ய சிபாரிசு செய்துள்ளார். இதனால் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்" என்றார். 

இதற்கிடையில் ஏ.டி.ஜி.பி ஒருவர் சாலமோனிடம் முக்கிய தகவல் ஒன்றைக் கூறியுள்ளார். `நள்ளிரவுக்குள் வீட்டை காலி செய்துவிட்டு செல்லுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது' என்று அவர்  கூறியுள்ளனர். இதனால், சாலமோன் மற்றும் அவரின் குடும்பத்தினர் நியாயம் கேட்டு நீலாங்கரை போலீஸ் நிலையத்துக்குச் சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது. போலீஸாரே இப்படி நடந்துகொண்டால் யாரிடம் சென்று நியாயத்தைக் கேட்பது என்கின்றனர் இந்தச் சம்பவத்தின் உண்மை நிலைமையைத் தெரிந்தவர்கள்.