வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (23/08/2018)

கடைசி தொடர்பு:17:30 (23/08/2018)

வெள்ளம் வடியாத கொள்ளிடம்! - கால்நடைகளோடு முகாமில் காத்திருக்கும் மக்கள்

கொள்ளிடம் கரையோர கிராமங்களில் வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். மீனவர்கள் 7 வது நாளாகக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

தஞ்சை, நாகை மாவட்டங்கள் வழியாகப் பாயும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் உள்ள முதலைமேடு திட்டு, சந்தப்படுகை, நாதல்படுகை , வெள்ளமனல், பாலூரான்படுகை உள்ளிட்ட கிராமங்களுக்குள் கடந்த வாரம் கொள்ளிடம் ஆற்று வெள்ளம் புகுந்தது.

அங்கு வசிக்கும் கிராம மக்கள் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் படகுகள் மூலமாக வெளியேற்றப்பட்டு, பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிராமங்களில் 7 நாள்களாகியும் வெள்ளம் வடியவில்லை. குடியிருப்புகளைச் சுற்றி வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதனால் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள கிராம மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். நிவாரண முகாம்களில் கிராம மக்கள் தங்களுடைய கால்நடைகளையும் பராமரித்து வருகிறார்கள்.

கொள்ளிடம் ஆறு, கடலுடன் கலக்கும் முகத்துவாரம் பகுதி பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே உள்ளது. இதன் காரணமாகக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் மீனவர்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். மீனவர்கள் நேற்று 7 வது நாளாக மீன்பிடிக்கச் செல்லவில்லை. மீனவர்களின் படகுகள் பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் புலியந்துறை, காட்டூர், தாண்டவகுளம், தர்காஸ் ஆகிய கிராமங்களில் உள்ள இறால் பண்ணைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

நாதல்படுகை, முதலைமேடு திட்டு ஆகிய கிராமங்களில் 100 ஏக்கருக்கும் மேலாகப் பயிரிடப் பட்டிருந்த பருத்தி, மரவல்லிக்கிழங்கு, மக்காச்சோளம், முருங்கை, முல்லை, அரும்பு, கத்திரி, மிளகாய், வெண்டைக்காய் பயிர்களும் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகின. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் மேற்கண்ட கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு ஆச்சாள்புரம் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் தங்க வைக்கப்பட்ட பொதுமக்களுக்கு நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், தனது சொந்த பணத்தில் இருந்து வேட்டி, சேலை, போர்வைகள் போன்ற நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

முதற்கட்டமாக ஆச்சாள்புரம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 362 பேருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. மீதமுள்ள முகாம்களுக்கும் நிவாரண உதவி வழங்கப்படும் என்றார். அப்போது சீர்காழி துணைக் காவல் கண்காணிப்பாளர் சேகர், ஆய்வாளர் செல்வம், முனிசேகர் உடனிருந்தனர்.