வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (23/08/2018)

கடைசி தொடர்பு:17:40 (23/08/2018)

பூட்டிய கதவை அழகிரி திறக்கப்பார்க்கிறார்'- ஆர்.பி.உதயகுமார் கிண்டல்!

ஆர் பி உதயகுமார்

'அழகிரியின் பூச்சாண்டி அ.தி.மு.க-வை ஒன்றும் செய்துவிட முடியாது' என்று கூறிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், 'தி.மு.க-வில் பூட்டிய கதவை அழகிரி திறக்க முயல்கிறார்' என்று குற்றம் சாட்டினார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில், திருமண நிகழ்ச்சியில்  கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "திருப்பரங்குன்றம் தொகுதி என்றுமே அ.தி.மு.க-வின் வெற்றிக் கோட்டை. அதில் எந்த மாற்றமும் இல்லை. எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க-வுக்குத்தான் திருப்பரங்குன்றம் தொகுதிமக்கள் வாக்களிப்பார்கள். பொதுவாக, இடைத்தேர்தலில் ஆளும் கட்சிக்கே மக்கள் வாக்களிப்பார்கள். அழகிரியின் ஃபார்முலாவை எதிர்த்து இரண்டு முறை திருமங்கலம் தொகுதியிலேயே வெற்றி பெற்றுள்ளோம். இனி, அழகிரி ஃபார்முலாவுக்கு வேலையே இல்லை. எங்களது திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்குகளைச் சேகரிப்போம்.

அழகரி சொன்னார், அ.தி.மு.க காணாமல் போய்விடும் என்று. ஆனால் அவர்தான் 10 ஆண்டுகளாக தேர்தல் களத்திலும் மக்கள் களத்திலும் காணாமால் போயுள்ளார். பூட்டிய கதவை அழகிரி திறக்க முயன்றுள்ளார். ஆனால், இனி திறக்க வாய்ப்பில்லை என்று அங்கே உள்ள தலைவர்கள் சொல்லியுள்ளனர். அழகிரியின் பூச்சாண்டி அ.தி.மு.க-வை ஒன்றும் செய்துவிட முடியாது. ஸ்டாலின், அழகிரியை ஏற்க மறுப்பதும் அழகிரி ஸ்டாலினை ஏற்க  மறுப்பதும் தொடர் கதையாக உள்ளது. இது, அண்ணன் தம்பி சண்டையா அல்லது அதிகாரச்  சண்டையா என்பது தெரியவில்லை. அவருக்கே அவர் கழகத்தில் முகவரி இல்லை என்கிறபோது, அவர் எப்படி தி.மு.க-வின் முகவரி ஆவார்'' எனக் கூறினார்.