இன்ஜினீயரிங் தமிழ் மீடியத்தில் சேர ஆள்கள் இல்லை..! கவலையில் அண்ணா பல்கலைக்கழகம் | No one is ready to choose Engineering seats in Tamil Medium

வெளியிடப்பட்ட நேரம்: 18:04 (23/08/2018)

கடைசி தொடர்பு:18:05 (23/08/2018)

இன்ஜினீயரிங் தமிழ் மீடியத்தில் சேர ஆள்கள் இல்லை..! கவலையில் அண்ணா பல்கலைக்கழகம்

2010-ம் ஆண்டில் தி.மு.க ஆட்சிக்காலத்தில், கட்டுமான பொறியியல் மற்றும் இயந்திர பொறியியல் இன்ஜினீயரிங் பிரிவுகள் தமிழ் மீடியத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தப் பிரிவில் படிப்பவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும்.

இன்ஜினீயரிங் தமிழ் மீடியத்தில் சேர ஆள்கள் இல்லை..! கவலையில் அண்ணா பல்கலைக்கழகம்

டந்து முடிந்த பொறியியல் கலந்தாய்வில், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளிலும் அரசு பொறியியல் கல்லூரியிலுமே இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இன்ஜினீயரிங் இடங்கள் நிரம்பாமல் உள்ளன. குறிப்பாக, தமிழ் மீடியத்தில் பெரும்பாலான இடங்கள் காலியாக உள்ளன. 

இன்ஜினீயரிங்

இந்த ஆண்டு ஆன்லைன் கலந்தாய்வை ஐந்து சுற்றுகளாக நடத்தி முடித்திருக்கிறது, அண்ணா பல்கலைக்கழகம். இதில் மொத்தமுள்ள 1,70,628 இடங்களில் 74,601 இடங்களே நிரம்பியுள்ளன. இன்னமும் 96,000 இடங்கள் காலியாக உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் உறுப்புக் கல்லூரிகளிலும், அரசு பொறியியல் கல்லூரியிலும் கட்டணம் குறைவு, போதுமான உட்கட்டமைப்பு, ஆசிரியர்கள் - மாணவர்கள் விகிதம் போன்ற காரணிகளால் இங்கு போட்டிப்போட்டுக்கொண்டு சேர்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகளிலும், அரசு பொறியியல் கல்லூரியிலுமே 2,000-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பாமல் உள்ளன.

2010-ம் ஆண்டில் தி.மு.க ஆட்சிக்காலத்தில், கட்டுமான பொறியியல் (Civil Engineering) மற்றும் இயந்திர பொறியியல் (Mechnical Engineering) என்ற இரண்டு பிரிவுகள் தமிழ் மீடியத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழ் மீடியத்தில் படிப்பவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்பதால் ஆரம்பத்தில் ஆர்வத்துடன் சேர்ந்தனர். ஆனால், இந்த ஆண்டு இரண்டு தமிழ் மீடியப் பிரிவுகளிலும் 1000-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகவே உள்ளன.

இன்ஜினீயரிங்

இந்த ஆண்டில், பொறியியல் கலந்தாய்வில் பத்து கல்லூரிகளில் மட்டுமே 100 சதவிகிதம் சேர்க்கை நடந்துள்ளது. 43 கல்லூரிகளில் 90 சதவிகித மாணவர்கள் சேர்ந்துள்ளனர். குறைந்தது 50 கல்லூரிகளிலாவது முழு அளவில் தேர்ச்சிபெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பத்து கல்லூரிகளில் மட்டுமே முழுமையாக நிரம்பியிருப்பது குறித்து பொறியியல் கல்லூரி நடத்தும் நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இன்ஜினீயரிங் அண்ணா பல்கலைக்கழகம்

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடம் பேசியபோது, ``மருத்துவக் கலந்தாய்வுக்காகப் பொறியியல் கலந்தாய்வை மிகவும் காலதாமதத்துடன் நடத்தியதே, மாணவர்கள் சேர்க்கை பெருமளவில் குறைந்ததற்குக் காரணம். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு சேர்க்கை நடத்தும்போதே பொறியியல் கல்லூரிகளுக்கும் சேர்க்கை நடத்திருந்தால் இவ்வளவு இடங்கள் காலியாகக் கிடப்பதற்கு வாய்ப்பில்லை.

பல்வேறு கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்பிக்கொள்ளும் வகையில், இரண்டாவது மற்றும் மூன்றாவதுகட்ட கவுன்சலிங் நடத்துவது வழக்கம். அதைப்போலவே, அண்ணா பல்கலைக்கழகமும் இரண்டாவது மற்றும் மூன்றாவதுகட்ட கவுன்சலிங் நடத்த வேண்டும். இவ்வாறு நடத்தினால், குறைந்தபட்சம் அரசுப் பொறியியல் கல்லூரியில் உள்ள இடங்களையாவது நிரம்பலாம். தற்போது 81 கல்லூரிகளில் 10 சதவிகிதத்தினருக்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர். இங்கு சேர்ந்துள்ளவர்கள் அருகில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரியில் இடம் இருந்தால் சேர வாய்ப்புள்ளது. 

கிராமப்புற மாணவர்களுக்கும் ஆன்லைன் வசதி குறைவாக உள்ள பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கும் உதவும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த மையங்களில் வரவேற்பு இல்லாததால், பல இடங்களில் தனியார் கல்லூரிகளே உதவி மையங்கள் அமைத்து மாணவர்களுக்கு உதவும்வகையில் களம் இறங்கின. இவர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தவறான வாக்குறுதிகள் கொடுத்து சேர்க்கை நடத்தியுள்ளனர். இவ்வாறு தெரியாமல் சேர்ந்தவர்களுக்கு இரண்டாம்கட்ட கலந்தாய்வில் வேறு கல்லூரிகளுக்கு இடம் மாறிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது" என்றனர். 

இன்ஜினீயரிங்அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியரும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைச் செயலாளருமான ரைமண்ட் உத்தரியராஜ், ``கடந்த 21 வருடமாக சென்னைக்கு நேரில்  ஒன்றைச் சாளரமுறையில் கலந்தாய்வில் கலந்துகொண்டு கல்லூரியைத் தேர்வுசெய்த முறை மாறி, இந்தமுறை போக்குவரத்து அலைச்சல், சென்னைக்குப் புதிதாக வரும்போது ஏற்படும் சிரமங்கள் இல்லாமல் வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கவும், கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கவும்  செய்துள்ளனர்.

ஆன்லைன் கலந்தாய்வு எப்படி நடக்கும் எனக் கலக்கத்துடன் கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவர்கள், விருப்பத் தேர்வாகக் குறிப்பிட்ட முதல் மூன்று கல்லூரிகளே ஏதேனும் ஒரு கல்லூரியை 75 சதவிகித மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. 50 சதவிகித மாணவர்களுக்கு முதல் தேர்வே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதுவே, ஆன்லைன் கலந்தாய்வின் மிகப்பெரிய வெற்றி. இரண்டாம்கட்ட கலந்தாய்வு நடத்த, அரசின் ஆலோசனை பெற்று அடுத்த ஆண்டு முதல் இரண்டாம்கட்ட கலந்தாய்வு நடத்தப்படும்" என்றார்.

இந்த ஆண்டு கலந்தாய்வில், மற்ற பாடங்களை எல்லாம் பின்னுக்குத்தள்ளி, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஐ.டி பிரிவுகளையே அதிகளவில் சேர்ந்துள்ளனர். ``இன்னமும் ஐ.டி துறையிலேயே அதிக வேலைவாய்ப்பு வழங்கப்படுவதால், ஐ.டி பாடப்பிரிவில் அதிகளவில் சேர்ந்துள்ளனர்" என்கின்றனர் தொழில்நுட்ப வல்லுநர்கள். வேலைவாய்ப்பை வழங்கும் துறைக்கும் பட்டைத்தீட்டும் கல்லூரிகளுக்கும் மட்டுமே இனி வசந்தகாலம்!


டிரெண்டிங் @ விகடன்