'ஸ்டெர்லைட் கழிவுகளை 8 வாரத்தில் அகற்றவும்'- தூத்துக்குடி கலெக்டருக்கு உத்தரவு! | High Court order to thoothukudi collector

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (23/08/2018)

கடைசி தொடர்பு:19:00 (23/08/2018)

'ஸ்டெர்லைட் கழிவுகளை 8 வாரத்தில் அகற்றவும்'- தூத்துக்குடி கலெக்டருக்கு உத்தரவு!

'தூத்துக்குடி, புதுக்கோட்டை உப்பாற்று ஓடைப் பகுதியில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையின் ரசாயன காப்பர்ஸ் லாக் கழிவுகள் கலந்த மண்ணை 8 வராத்துக்குள் அகற்றிட வேண்டும்' என மாவட்ட ஆட்சியருக்கு  உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

ஸ்டெர்லைட்

'தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது' என தமிழக அரசு கடந்த மே 28-ம் தேதி அரசாணை வெளியிட்டு, ஆலைக்கு சீல் வைத்தது. ஆனால், கடந்த மார்ச் மாதத்துடன் ஆலையை இயக்குதலுக்கான மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி முடிவடைந்த நிலையில், மீண்டும் ஆலையை இயக்குவதற்கான அனுமதியை ரத்துசெய்தது. அனுமதி ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்களில் ஒன்றாக, ஆலையில் கழிவுகள்,  புதுக்கோட்டை பகுதியில் உள்ள உப்பாற்று ஓடையில் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் கொட்டப்பட்டுள்ளது என்பதும் ஒன்று.

இதற்குப் பின், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதியைப் பெற, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகளில் ஒன்றாக, உப்பாற்று ஓடை அருகில் உள்ள தனியார் நிலத்தில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளைச் சுற்றி சிமென்ட் சுற்றுச்சுவர் எழுப்பும் பணி வேகமாக நடைபெற்றுவந்தது. இந்த நிலையில், ஆலை நிர்வாகத்துக்கு எதிராக சமூக ஆர்வலர்களால் பல்வேறு வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்டன.

ஸ்டெர்லைட் கழிவு

இதில் ஒன்றாக, நிலம், நீர், காற்று மாசுபடுதலுக்கு எதிரான இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், புதுக்கோட்டையைச் சேர்ந்த காந்திமதிநாதன் என்பவர், உப்பாற்று ஓடையில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளை அகற்றக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை உப்பாற்று ஓடைப் பகுதியில் ஸ்டெர்லைட் ஆலையின் ரசாயன காப்பர் கழிவு மண் கொட்டிவைக்கப்பட்டுள்ளது. இதை அகற்ற, கடந்த 2014-ல் மனு அளிக்கப்பட்டது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த ஓடைப் பகுதியில் மலைபோல குவிக்கப்பட்டிருந்த கழிவு மண்ணால், கடந்த 2015-ல் ஏற்பட்ட மழையால் தண்ணீர் ஓடையில் செல்ல முடியாமல் தூத்துக்குடி நகருக்குள் புகுந்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மக்கள், படகுகள் மூலம் மீட்கப்பட்டார்கள். அதன்பிறகும், ஸ்டெர்லைட் நிர்வாகத்தால் காப்பர்ஸ் லாக் மண் அகற்றப்படவில்லை.  இந்தக் கழிவு மண் அகற்றப்பட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அதில், ”தூத்துக்குடி புதுக்கோட்டை உப்பாற்று ஓடைப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையின் ரசாயன காப்பர் மணல் கலந்த கழிவு மண்ணை 8 வாரத்துக்குள்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அகற்ற வேண்டும்” என உத்தரவிட்டனர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close