`என் மனைவியை அப்படி பேசாதே’ - அம்மிகல்லால் அர்ச்சகரைக் கொலை செய்த வாலிபர் 

கொலை செய்யப்பட்ட கார்த்திக் ராஜா

நண்பனின் தங்கை திருமணத்தை நடத்த மறுத்ததாலும் மனைவியை அவதூறாகப் பேசியதாலும் அம்மிகல்லால் அர்ச்சகரை அவரின் உறவினர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. இவர், அதே பகுதியில் உள்ள ஆதிபராசக்தி கோயிலில் அர்ச்சகராகவும் ஆட்டோ டிரைவராகவும் வேலை செய்து வந்தார். மேலும், சிவசேனா கட்சியிலும் முக்கியப் பதவியில் இருந்தார். இவரின் மனைவி சத்யா. இவர்களுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். நேற்றிரவு, கார்த்திக் ராஜா காற்றுக்காக வீட்டின் வெளியில் படுத்து தூங்கினார். அதிகாலை 4.30 மணியளவில் தலையில் பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரின் உடல் அருகில் அம்மிக்கல் ஒன்று கிடந்தது. அதிலும் ரத்தம் படிந்திருந்தது. அதோடு கார்த்திக் ராஜாவின் உடலில் ஆங்காங்கே கத்திக் குத்து காயங்களும் இருந்தன.

ஏழுமலை

இதைப்பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார், கார்த்திக் ராஜாவின் சடலத்தைக் கைப்பற்றி சென்னை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தநிலையில், கொலை செய்யப்பட்ட கார்த்திக் ராஜாவின் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர், ரத்தம் படிந்த கத்தியுடன் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஏழுமலை, ரம்ஜான் பேகம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில நாள்களுக்கு முன்பு கார்த்திக் ராஜாவைச் சந்தித்த ஏழுமலை, தன்னுடைய நண்பரின் தங்கை திருமணத்தை நடத்தி வைக்கும்படி கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஏழுமலையின் மனைவி குறித்து கார்த்திக் ராஜா, தவறாகப் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை, தூங்கிக்கொண்டிருந்த கார்த்திக் ராஜாவை கத்தியால் குத்தினார். அப்போது அவரின் உயிர் பிரியாததால் அருகில் உள்ள அம்மிக்கல்லைத் தூக்கி தலையில் போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார். கார்த்திக் ராஜாவை கொலை செய்த ஏழுமலையைக் கைதுசெய்து கத்தியைப் பறிமுதல் செய்துள்ளோம்" என்றனர். 

 இந்தச் சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!