உதயசந்திரன், சுனில் பாலிவால் உள்ளிட்ட மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்..! | TN Senior IAS officers transferred

வெளியிடப்பட்ட நேரம்: 20:28 (23/08/2018)

கடைசி தொடர்பு:20:28 (23/08/2018)

உதயசந்திரன், சுனில் பாலிவால் உள்ளிட்ட மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்..!

தமிழகத்தில், உதயசந்திரன், சுனில் பாலிவால் உள்ளிட்ட மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் வெவ்வெறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

தமிழகத்தின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலரை மாற்றம் செய்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு பாடநூல் கழகச் செயலாளர் உதயசந்திரன், தற்போது தொல்லியல் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், ராமநாதபுரத்துக்கும், ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் மதுரை மாவட்டத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன், கடலூர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார். உயர் கல்வித்துறை செயலாளராக இருந்த சுனில் பாலிவால், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு கைத்தறி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த சந்தோஷ் பாபு, தகவல் தொழில்நுட்பத்துறையின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக இருந்த அருண் ராய், தொழிற்சாலைகள் துறையின் கூடுதல் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். கடலூர் ஆட்சியராக இருந்த தண்டபாணி, எழுதுபொருள்கள் மற்றும் அச்சுத்துறை இயக்குநராகவும், சிவகங்கை ஆட்சியராக இருந்த லதா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை இணைச் செயலாளராகவும் மாற்றப்பட்டுள்ளார். உயர்கல்வித் துறை செயலாளராக மங்கத்ராம் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.