`தி.மு.க பற்றி எந்தக் கேள்வியும் கேட்க வேண்டாம்' - மு.க.அழகிரி பேட்டி!

அழகிரி

'அனைத்தும் பேரணிக்குப் பிறகே தெரியவரும்' என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

கருணாநிதி மறைவுக்குப் பிறகு, தி.மு.க-வில் பரபரப்பான சூழ்நிலை நிலவிவருகிறது. இதற்கு கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி தெரிவித்துவரும் கருத்துகள்தான் காரணம். அழகிரியின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் உற்று கவனிக்கப்பட்டுவருகிறது. இதற்கிடையே, மு.க.அழகிரி இன்று மாலை ராசிபுரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க.,விவசாய அணி மாநிலச் செயலாளருமான கே.பி.இராமலிங்கத்தின் மகள் திருமண நிகழ்ச்சிக்காக வந்திருந்தார்.

அப்போது, பத்திரிகையாளர்கள் அழகிரியைச் சூழ்ந்துகொண்டு கேள்விகளைக் கேட்டார்கள். ஆனால், அழகிரி அவர்களிடம் பேசாமல், மண மேடைக்குச் சென்று மணமக்களை வாழ்ந்திவிட்டு வெளியே வந்தார். அப்போதும் பத்திரிகையாளர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்க, அழகிரி பேசத் தொடங்கினார். ''நான் தி.மு.க-வில் இல்லை. அதனால், என்னிடம் தி.மு.க பற்றி எந்தக் கேள்வியும் கேட்க வேண்டாம். தற்போது எதுவும் பேசும் சூழ்நிலையில் இல்லை. காலம் வரும்போது பதில் சொல்கிறேன். எங்கள் ஆதரவாளர்களிடமும், கருணாநிதியின் உண்மை விசுவாசிகளிடமும் கலந்துபேசி முக்கிய முடிவு எடுக்கப்படும். கலைஞரின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் இருக்கிறார்கள். அனைத்தும் பேரணிக்குப் பிறகே தெரிய வரும்'' என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!