வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (23/08/2018)

கடைசி தொடர்பு:22:00 (23/08/2018)

கேரள பெருமழை பாதிப்புக்கு நிதி வழங்கிய சிறுமியை நோக்கி பொழியும் கருணை மழை!

பெருமழையால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்குத் தனது இதய ஆபரேஷனுக்காக வைத்திருந்த பணத்தில் ஒருபகுதியை நிவாரணமாக வழங்கிய கரூர் சிறுமிக்கு, விகடன் இணையதளச் செய்தியின் எதிரொலியால் பாராட்டுகளும், உதவிகளும் குவிகின்றன. கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள குமரமங்கலத்தைச் சேர்ந்தவர் அட்சயா. 12 வயது சிறுமியான இவரது தந்தை சுப்பிரமணி இறந்துவிட்டார். கூலி வேலைபார்க்கும் தாய் ஜோதிமணியோடு வாழ்ந்துவருகிறார். அருகில் உள்ள அரசுப் பள்ளியில் ஏழாவது படிக்கிறார். பிறவியிலேயே இதயப் பிரச்னையோடு பிறந்த அட்சயாவுக்கு, ஆபரேஷன் பண்ண பணமில்லாமல் ஜோதிமணி அல்லாடி வந்திருக்கிறார். 

சிறுமி அட்சயாவுடன் குமாரமங்கலம்

கடந்த வருடம், அட்சயாவுக்கு அதனால் சிக்கலாக, 'உடனே ஆபரேஷன் பண்ணலன்னா, அட்சயாவை மறந்துட வேண்டியதுதான்' என்று மருத்துவர்கள் சொல்ல, ஆடிப்போயிருக்கிறார் ஜோதிமணி. கையைப் பிசைந்தபடி கண்ணீரோடு நிர்கதியாக நின்ற ஜோதிமணிக்கு 'இணைந்த கைகள்' என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாதிக் அலி உதவிக்கரம் நீட்டினார். அட்சயாவின் அவலநிலையை சமூக வலைத்தளங்களில் சாதிக் அலி பகிர, அட்சயாவின் இதய ஆபரேஷனுக்கு உரிய மூன்றரை லட்ச ரூபாய் பல நல் உள்ளங்கள் மூலம் கிடைத்திருக்கிறது. அதை வைத்து, சென்னை அப்பல்லோவில் அட்சயாவுக்கு வெற்றிகரமாக இதய ஆபரேஷன் முடிந்தது. ஆனால் டாக்டர்கள், 'இன்னும் ஒரு வருடத்தில் அட்சயாவுக்கு மேஜர் ஆபரேஷன் ஒண்ணு பண்ணணும். இல்லைனா, முழுமையாகக்  குணப்படுத்த முடியாது' என்று சொல்லியிருக்கிறார்கள்.

அந்த ஆபரேஷனை வரும் நவம்பர் மாதம் செய்யவேண்டிய நிலைமை. 'ஆபரேஷனுக்கு இரண்டரை லட்சம் ஆகும்' எனச் சொன்னதால், மறுபடியும் அட்சயாவுக்கு உதவ சாதிக் அலியே முன்வந்தார். இந்த முறையும் சமூக வலைதளங்கள்மூலம் அவர் நிதிதிரட்டத் தொடங்கினார். ஒரே வாரத்தில் 20,000 வரை சேர்ந்தது. இந்த நிலையில்தான், கேரளத்தை மழை வெள்ளம் புரட்டிப்போட்ட கொடுமையை டி.வி-யில் அட்சயா பார்க்க நேர்ந்தது. அங்கே, தன்னைப் போன்ற சிறுமிகள் சிரமப்படுவதைப் பார்த்து இதயம் கசிந்தவர், தனது ஆபரேஷனுக்காக கலெக்டான பணத்தில் 5,000 ரூபாயை 'மக்கள் பாதை' என்ற அமைப்பின்மூலம் கேரளத்துக்கு நிராவரண நிதியாக வழங்கினார். பலரையும் நெகிழச் செய்த இந்தச் செய்தியை முதலில் நமது விகடன் இணைதளம்தான் கடந்த 19 ம் தேதி, 'அறுவை சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தில் ஒருபகுதியை கேரள நிவாரணத்துக்கு வழங்கிய சிறுமி!' என்ற தலைப்பில் செய்தி பதிந்தது. அந்தச் செய்தி, பல ஆயிரம் வாசகர்களை நெகிழவைத்தது. 

அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் அனைத்து தினசரிகளும், தொலைக்காட்சிகளும் செய்தி வெளியிட்டன. இந்திய அளவில் உள்ள பிரபல ஆங்கிலப் பத்திரிகைகளும் இந்தச் செய்தியை வெளியிட, அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அட்சயாவை நோக்கி உச்சி முகரும் பாராட்டுகள் குவிந்தன. சென்னையில் உள்ள இரண்டு பிரபல மருத்துவமனைகள், அட்சயாவுக்கு இலவசமாக இதய அறுவைசிகிச்சை செய்வதாக சாதிக் அலியிடம் உத்தரவாதம் அளித்தன. ஐ.ஏ.எஸ் சகாயத்தை வழிகாட்டுதலாகக்கொண்டு செயல்படும் 'மக்கள் பாதை' அமைப்பின் மாநில தலைமையில் இருந்து அட்சயாவின் மருத்துவ ரிப்போர்ட்டை கேட்டு வாங்கினார்கள். 
 
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகன் மோகன் குமாரமங்கலம், இந்தச் செய்தியைப் படித்துவிட்டு, இன்றைக்கு அட்சயாவை பார்க்க வந்தார். தமிழ்நாடு தொழில் வல்லுநர்கள் காங்கிரஸ் பிரிவு மாநிலத் தலைவராக இருக்கும் அவர், அட்சயாவையும், 'இணைந்த கைகள்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாதிக் அலியையும் பாராட்டினார். அப்போது, 'கேரள நிவாரண நிதியாகத் தனது இதய ஆபரேஷனுக்காக வைத்திருந்த பணத்தில் 5000 ரூபாயை அட்சயா கொடுத்தார். அவரது கருணையை பாராட்டும் நோக்கில் அதை ஐந்து மடங்காக 25,000 ரூபாயாக அவருக்குத் தருகிறேன்' என்று வழங்கினார். அதோடு, தனது நண்பர்கள் மற்றும் தெரிந்த அறக்கட்டளைகளிடம் பேசி, அட்சயா இதய ஆபரேஷனுக்குத் தேவையான பணத்தைத் திரட்டி, அவருக்கு ஏற்கெனவே ஆபரேஷன் நடந்த மருத்துவமனையிலேயே ஆபரேஷன் பண்ண வைப்பேன்' என்று உறுதி  அளித்தார். 

அட்சயாவுடன் குமாரமங்கலம்

அவரிடம் பேசினோம், "எவ்வளவோ கோடீஸ்வரர்களிடம் இல்லாத ஈரம், எளிய சிறுமி அட்சயாவின் இதயத்தில் இருப்பது என்னை சிலிர்க்கவைத்துவிட்டது. அந்த நல்ல இதயத்தை நலமாக்குவது நமது கடமை. அட்சயா போன்ற சிறுமிகள்தாம் வருங்கால தமிழகத்தின் நம்பிக்கைகள். அவரை 100 சதவிகிதம் குணமாக்கும் வரை அட்சயாவுக்கு ஒரு அண்ணனாக பக்கத்துல இருப்பேன். 19-ம் தேதியே செய்தியைப் பார்த்துட்டேன். இன்னைக்கு எங்கப்பாவோட நினைவுநாள். அதனால், இன்னைக்கு வந்து அட்சயாவைப் பார்த்திருக்கிறேன். இதுவரை பார்க்காத ஈரம், காணாத கருணை இப்போ இளையதலைமுறையிடம் இருப்பது ஒரு புது நம்பிக்கையைத் தருகிறது" என்றார் உணர்ச்சிப்பெருக்கோடு.