`வீணாகும் காவிரி நீரை ராமநாதபுரம் மாவட்டத்துக்குக் கொண்டு வர வேண்டும்’ - முன்னாள் அமைச்சர் கோரிக்கை | ex minister requested to bring Cauvery water to Ramanathapuram district

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (23/08/2018)

கடைசி தொடர்பு:23:00 (23/08/2018)

`வீணாகும் காவிரி நீரை ராமநாதபுரம் மாவட்டத்துக்குக் கொண்டு வர வேண்டும்’ - முன்னாள் அமைச்சர் கோரிக்கை

காவிரியில் பாய்ந்து கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரை காய்ந்து கிடக்கும் ராமநாதபுரம் பகுதிக்குக் கொண்டு வரும் வகையில் வெள்ள நீர் வடிகால் அமைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.


கடலாடியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சரும் முன்னாள் எம்.பி-யுமான சத்தியமூர்த்தி, ''வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர், கடலாடி, கமுதி பகுதிகள் பாசன வசதி பெறும் வகையில் காவிரியில் வெள்ள நீர் வடிகால் ஏற்படுத்தி வைப்பாறோடு இணைக்க 1982-ம் ஆண்டு கவர்னர் உரையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதல்வர் எம்.ஜி.ஆரிடம் வலியுறுத்தியதின் பேரில் இதற்கான உத்தேச திட்ட வரைவு 15 நாள்களில் உருவாக்கத் திட்டமிடப்பட்டது. அப்போது கர்நாடக முதல்வராக இருந்த குண்டுராவ் தலையீட்டால் இந்தத் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு Irrigation Consultative குழுவில் உறுப்பினராக இருந்த நான் கவர்னர் அறிவிப்பைச் செயல்படுத்த வலியுறுத்தினேன். ஆனால், காவிரி நதி நீர் பங்கீடு பிரச்னை முடியும் வரையில் 'காவிரி-வைப்பாறு' இணைப்பு குறித்து பேச வேண்டாம் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது காவிரி நதி நீர் பங்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் இறுதி முடிவை அறிவித்துள்ளது. எனவே, வீணாகக் கடலில் சென்று கலக்கும் காவிரி வெள்ள நீரை தேக்கவும் வறண்ட பகுதிகளுக்கு திசை திருப்பிவிடவும் பரிசிலிக்கும் இந்நேரத்தில் காவிரியில் இருந்து வறண்டு கிடக்கும் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வெள்ளப் போக்கி (Flold carrier) அமைக்க வேண்டும். அதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவி வரும் பாசன மற்றும் குடிநீர் பற்றாக்குறை பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்" என்றார்.


[X] Close

[X] Close