வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (24/08/2018)

கடைசி தொடர்பு:00:00 (24/08/2018)

`தமிழ்நாட்டிலிருந்து நீளும் உதவிக்கரம்' - நெகிழும் கேரள மக்கள்!

கேரளாவையே புரட்டிப்போட்ட வெள்ளத்தில் சிக்கிய மக்கள், ஒரு வாரம் கடந்த பிறகும், இன்னும் இயல்புநிலைக்குத் திரும்ப முடியாமல் முகாம்களிலேயே தஞ்சமடைந்துள்ளனர்.

ஆளூர் ஷா நவாஸ்

20,000 கோடிக்கு இழப்பு என மதிப்பிட்டுள்ளது கேரள அரசு. மோடி வந்து பார்வையிட்ட பிறகும் மத்திய அரசிடமிருந்து இதுவரை 600 கோடி மட்டுமே நிவாரணமாகக் கிடைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்த 700 கோடி உட்பட பல்வேறு நாடுகளும் அறிவித்த பெரும் தொகையை மோடி அரசு ஏற்க மறுத்துள்ள நிலையில், மீண்டு எழ பல வகையிலும் போராடிக்கொண்டிருக்கிறது கேரளா.

தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல மாநில அரசுகள் நிவாரணத் தொகையும் பொருள்களும் வழங்கியுள்ளன. அரசைக் கடந்து தன்னியல்பாக மக்கள் அளித்துவரும் நிவாரணம், கேரளாவுக்குப் பேருதவியாய் உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு கட்சிகள், அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்களால் திரட்டப்படும் நிவாரணப் பொருள்கள், லாரி லாரியாக கேரளாவுக்கு அனுப்பப் படுகின்றன. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் 'நம் கரங்கள் உதவட்டும்' அமைப்பின் சார்பில் மக்களிடம் திரட்டப்பட்ட நிவாரணப் பொருள்களுடன், அவ்வமைப்பின் நிர்வாகிகள் அலிகான், வாஹித் மற்றும் வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் ஆகியோர் கேரளா சென்றனர். ஆலப்புழா பகுதியில் முகாம்களில் தங்கியுள்ள மக்களைச் சந்தித்தனர்.

இதுகுறித்து ஆளூர் ஷா நவாஸ் கூறியதாவது, "கடும் வெள்ளத்தில் அனைத்தையும் இழந்து சொந்த மண்ணிலேயே கேரள மக்கள் அகதிகளாகியுள்ளனர். எனினும் மதம், மொழி, இன எல்லைகளைக் கடந்து நீளும் உதவிக் கரங்களால் நெகிழ்ந்துபோயுள்ளனர். குறிப்பாக, தமிழ்நாட்டு மக்களிடமிருந்து பெருமளவில் உதவிகள் குவிவதை நன்றியுடன் நினைவுகூர்ந்தனர். கேரள அரசின் மீட்புப் பணிகள் சிறப்பாக உள்ளன. எங்கிருந்து நிவாரணப் பொருள்கள் வந்தாலும் அவற்றை முறையாகப் பெற்று பாதுகாத்து, மக்களுக்குப் பகிர்ந்து அளிக்கிறது அரசு. நிவாரணப் பொருள்களுடன் எங்கள் லாரி ஆலப்புழா பகுதிக்குள் நுழைந்த உடனேயே, காவல்துறையினர் வந்து விசாரித்து, முகாம் இருக்கும் இடத்துக்கு வழிகாட்டி அனுப்பிவைத்தனர். 

ஆளூர் ஷா நவாஸ்

அங்கு சென்றதும், எங்கிருந்து வருகிறோம், என்னென்ன பொருள்களைக் கொண்டுவந்துள்ளோம் என்பன போன்ற விவரங்களை அதிகாரிகள் குறிப்பெடுத்துக்கொண்டனர். அங்குள்ள முகாமில் எத்தனை பேர் தங்கியுள்ளனர், அவர்களின் இழப்பு என்ன, அவர்களுக்கு வந்த நிவாரணப் பொருள்களின் விவரம் என்ன என்பதை அங்குள்ள அலுவலரால் பதிவுசெய்யப்படுகிறது. அதற்கென ஒரு அலுவலர் கணிப்பொறியுடன் அங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். நிவாரணப் பொருள்களைப் பெறுவதிலும் பாதுகாப்பதிலும் பகிர்ந்தளிப்பதிலும் எவ்வித குழப்பமும் இல்லை. மக்களும் அரசுக்கு ஒத்துழைப்புகொடுத்துவருகின்றனர். கேரளா விரைந்து மீள வேண்டும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க