வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (24/08/2018)

கடைசி தொடர்பு:07:52 (24/08/2018)

தடகளப் போட்டி நடத்தாத சிவகங்கை மாவட்டம் - மாநில அளவிலான வாய்ப்பை இழந்த மாணவர்கள்!

தமிழக அளவில் மாவட்டங்களுக்கிடையிலான போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இழந்ததாகவும் இதில் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட விளையாட்டு வீரர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

சிவகங்கை மாவட்ட தடகள விளையாட்டு வீரர்களை மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பாமல் இருந்த பொறுப்பு அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க விளையாட்டு வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர். தடகளப்போட்டிகள் ஒட்டப்பந்தயம் 100 மீ, 200 மீ, 400 மீட்டர்,1500 மீட்டர் , 800 மீட்டர், 5000 மீட்டர், 10000 மீட்டர் , ஈட்டிஎறிதல், சங்கிலி குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், போல்ட் வால்ட், கம்பு ஊன்றி தாண்டுதல் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்படும். 14 முதல் 20 வயது மாணவர்களுக்கு தடகளப் போட்டி நடத்தி தேர்வு செய்ய வேண்டும். இதற்கிடையே, சிவகங்கை மாவட்ட விளையாட்டுத்துறை உரிய கவனம் செலுத்தாததால் இம்மாவட்ட இளைஞர்கள், மாணவர்கள் சென்னையில் நடந்த போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை. கடந்த ஆகஸ்ட் 17, 18, 19 ஆகிய தேதிகளில் சென்னையில் நடந்த தடகளப் போட்டிக்கு சிவகங்கை மாவட்ட மாணவர்கள், இளைஞர்கள் தேர்வு செய்து அனுப்பவில்லை. இதன் காரணமாக தடகளப் போட்டியில் தேசிய அளவில் பங்கேற்கிற வாய்ப்பு சிவகங்கை மாவட்ட வீரர்களுக்கு கிடைக்காமல் போனது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் பேசும்போது, ``தமிழக அளவில் மாவட்டங்களுக்கு இடையிலான தடகளப்போட்டி சென்னையில் நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் தடகள வீரர்கள் போட்டிக்குத் தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டார்கள். ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் இருந்து மட்டும் மாணவர்கள் இருந்து சென்னையில் நடந்த போட்டிக்கு யாரையும் அனுப்பி வைக்காத மர்மம் ஏன்? இதன் பின்னணி என்ன என்பது மாணவர்களுக்குத் தெரியவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க