வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (24/08/2018)

கடைசி தொடர்பு:08:32 (24/08/2018)

``நாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை” - எய்ம்ஸ் மருத்துவர்கள் விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம்

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதலிருந்தே ஜெயலலிதா கவலைக்கிடமாக  இருந்ததாக எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

ஆறுமுகசாமி விசாரணையின் எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆஜர்


ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக் குழு விசாரித்து வருகிறது.  பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளிக்க வந்த எய்ம்ஸ் மருத்துவக் குழுவுக்கும் சம்மன் அனுப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை நுரையீரல் சிறப்பு நிபுணர் கில்னானி, மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர் அஞ்சன்த்ரிக்கா மற்றும் இதய நோய் சிகிச்சை நிபுணர் நிதிஷ்நாயக் ஆகியோர் நேற்று (23-08-2018)  விசாரணை ஆணையத்தில் ஆஜராகி, சிகிச்சை தொடர்பாக பதிலளித்தனர்.
 
நேற்று காலை 10 முதல் மாலை 5 மணி வரை நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை மேற்கொண்டார். அப்போது தாங்கள் ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளிக்க அழைக்கப்படவில்லை. அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை மேற்பார்வையிடவே அழைக்கப்பட்டோம் என வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும், ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை தொடர்பான மருத்துவ ஆவணங்கள் மூலம் அவரது உடல் நிலை குறித்த தகவல்களைத் தெரிந்துகொண்டோம். அதன்படி ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளிலிருந்து கவலைக்கிடமாகதான் இருந்துள்ளார். அந்த நிலைதான்  75 நாள்களும் தொடர்ந்துள்ளது என அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும், பெரும்பாலான நாள்களில் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுதான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என எய்ம்ஸ் மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். எய்ம்ஸ் மருத்துவர்களின் இந்த வாக்குமூலம் விசாரணையில் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.