வெளியிடப்பட்ட நேரம்: 08:47 (24/08/2018)

கடைசி தொடர்பு:08:47 (24/08/2018)

`வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முக்கொம்பு மதகுகள்!’ சீரமைப்பு பணிகள் தொடக்கம்

வெள்ளத்தில் சேதம் அடைந்த முக்கொம்பு மேலணையை சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

முக்கொம்பு

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில வாரங்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாகக் காவிரியில் அதிகளவு நீர் வந்துகொண்டிருக்கிறது. மேட்டூர் அணை தனது முழுக்கொள்ளவை எட்டியதையடுத்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி மற்றும் கொள்ளிடத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் திருச்சியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கொள்ளிடம் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. பெரிய அளவில் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை. நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் முக்கொம்பு மேலணையின் 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இரவு நேரம் என்பதாலும் மக்களின் நடமாட்டம் இல்லாததாலும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதற்கிடையில், அப்பகுதியைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, ``அணை உடைப்பால் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை'' எனத் தெரிவித்தார்.

முக்கொம்பு

மேலணையில் ஆய்வு நடத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையைச் சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். தற்போது அணை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மணல் மூட்டைகள், இரும்புத் தடுப்புகளைப் பயன்படுத்தி உடைந்த பகுதிகள் சீரமைக்கப்படவுள்ளன. சேதமடைந்த பகுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிடுகிறார்.