105 அடி உயர குடிநீர்த்தொட்டியில் ஏறினார்! - மிரளவைத்த நெல்லை பெண் கலெக்டரின் ஆய்வு | brave attitude of nellai lady collector to solve village peoples grievances

வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (24/08/2018)

கடைசி தொடர்பு:10:50 (24/08/2018)

105 அடி உயர குடிநீர்த்தொட்டியில் ஏறினார்! - மிரளவைத்த நெல்லை பெண் கலெக்டரின் ஆய்வு

நெல்லை கலெக்டர் ஆய்வு

நெல்லையின் பெண் மாவட்ட ஆட்சியர், சுகாதாரப் பணிகள் குறித்த கள ஆய்வின்போது 105 அடி உயரத்தில் உள்ள குடிநீர்த் தொட்டியின் மீது ஏறி ஆய்வு செய்தார். அந்தத் தொட்டியில் சுகாதாரச் சீர்கேடு இருந்ததால் அதிகாரிகளைக் கடிந்துகொண்டார்.

நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ள கூனியூர் கிராமம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கூனியூர் மெயின் சாலையில் அமைந்துள்ள 40 அடி உயரமுள்ள 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறி, பொதுமக்களுக்குச் சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ்

பின்னர், அங்குள்ள மகளிர் சுகாதார வளாகம் சுத்தமான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்பதையும் கழிவுநீர் ஓடைகள் முறையாகப் பராமரிப்பு செய்யப்படுகிறதா என்பதையும் பார்வையிட்டார். தெருவிளக்குகளை ஆய்வு செய்த அவர், எரியாத விளக்குகளை எல்.இ.டி பல்புகளாக மாற்றுமாறு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களிடம் சுத்தம் தொடர்பாகவும், உணவு உண்ணும் முன்பாக கை கழுவுதல், கழிவறையைப் பயன்படுத்துதல் குறித்து விளக்கிப் பேசினார். அந்தப் பள்ளியில் வழங்கப்படும் சத்துணவு தரமான முறையில் வழங்கப்படுகிறதா என்பதை மாணவ, மாணவிகளிடம் பேசிக் கேட்டறிந்தார். அத்துடன், பள்ளி மாணவ, மாணவிகளுக்குச் சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்தார். மாணவர்கள் தங்களது சுற்றுப்புறத்தைச் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். 

குடிநீர் தொட்டியில் ஆய்வு செய்த பெண் கலெக்டர்

அதைத் தொடர்ந்து சேரன்மகாதேவி நீதிமன்றம் எதிரே அமைந்துள்ள 105 அடி உயரமுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது அவர் ஏறினார். அவருடன் வந்திருந்த அதிகாரிகளில் சிலர் மேலே ஏறுவதற்கு அச்சப்பட்டார்கள். ஆனால், எதையும் கண்டுகொள்ளாத ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தொட்டியின் மீது ஏறினார். அங்கு ஆய்வு செய்தபோது அந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படவில்லை என்பதைக் கண்டறிந்தார். அதனால் அந்தத் தொட்டியை உடனடியாக சுத்தம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

பின்னர் பேசிய அவர், ``வழக்கமான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளேன். இதேபோல மாவட்டம் முழுவதும் சென்று ஆய்வு மேற்கொள்வேன். அதனால் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அதிகாரிகள் தங்களுடைய பகுதிகளைச் சிறப்பாக பராமரிக்க வேண்டும்’’ எனக் கேட்டுக்கொண்டார். மாவட்ட ஆட்சியருடன், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.