வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (24/08/2018)

கடைசி தொடர்பு:13:15 (24/08/2018)

இலங்கைச் சிறையில் இருக்கும் தூத்துக்குடி மீனவர்களை மீட்கக்கோரி கலெக்டரிடம் குடும்பத்தினர் மனு!

இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த 8 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி.யிடம் மனு அளித்தனர். 

மீனவர்கள்

தூத்துக்குடி திரேஸ்புரம் கடல் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில், இதே பகுதியைச் சேர்ந்த அந்தோணி, ரூபின்ஸ்டன், வில்பிரட், விஜய், ரமேஷ், ஆரோக்கியம், வினோதன் மற்றும் பாக்கியம் ஆகிய 8 பேர் கடந்த 18-ம் தேதி மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ``எல்லை தாண்டி மீன்பிடித்ததால் உங்களைக் கைது செய்கிறோம்” எனக்கூறி, இலங்கைக் கடற்படையினர் சுற்றி வளைத்து கைது செய்து, துப்பாக்கி முனையில் படகுடன் இலங்கைக்கு அழைத்துச் சென்றனர்.

இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் அவர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இத்தகவல் இலங்கைத் தூதரகம் மூலமாகத் தமிழக அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 8 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் மாவட்ட எஸ்.பி. முரளிரம்பா ஆகியோரிடம் இன்று மனு அளித்தனர். 

தூத்துக்குடி மீனவர்களை மீட்கக்கோரி கலெக்டரிடம் குடும்பத்தினர் மனு!

இது குறித்து திரேஸ்புரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கூறுகையில்,``கடந்த 18-ம் தேதி அந்தோணி தலைமையிலான 7 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். 21-ம் தேதி இந்தியக் கடல் எல்லைக்குள் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையினர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். இந்தத் தகவலை மீனவர் அந்தோணி, படகின் உரிமையாளரான வினோத் என்பவருக்குப் போனில் கூறினார். இலங்கைக் கடற்படையின் இந்த நடவடிக்கை தொடர்கதையாகி வருகிறது.

இந்தியாவுடன் பாகிஸ்தான் மோதல் போக்கில் ஈடுபட்ட போதிலும், குஜராத் மாநிலத்தில் மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடிப்பில் ஈடுபட்ட போதிலும், பாகிஸ்தான் அரசு இதுபோன்ற கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை. ஆனால், தற்போது இலங்கை அரசு, தமிழக மீனவர்களை வேண்டும் என்றே பழிவாங்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால், கடலோரப் பகுதி மீனவர்கள் எந்த நேரத்திலும் கலக்கத்திலேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.   

மத்திய அரசு தலையிட்டு இலங்கைக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இலங்கை அரசிடம் தெரிவிக்க வேண்டும். அத்துமீறி கைது செய்யப்பட்டுள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த 8 மீனவர்களையும், படகையும் மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலை தொடராமல் தமிழக அரசும் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்” என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க