வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (24/08/2018)

கடைசி தொடர்பு:13:15 (24/08/2018)

`கேரள வெள்ளத்துக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது' - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

``கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்துக்குத் தமிழகம் காரணம் இல்லை'' என உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு. 

முல்லைப்பெரியார் அணை- தமிழகம்

கடுமையான வெள்ளப் பாதிப்பில் இருந்து கேரளா மீண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. முன்னதாக, கேரளாவில் பெய்த கனமழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகக் குறைக்க வேண்டும் எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதனிடையில், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த ரசுல் ஜாய் என்பவர் இதே கோரிக்கையை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

உச்ச நீதிமன்றம்

இந்த வழக்கு தொடர்பாக நேற்றைய விசாரணையில், `முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தபோதே, அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றியிருந்தால் கேரள வெள்ள பாதிப்பை பெருமளவு குறைத்திருக்க முடியும். கேரள அரசு கோரிக்கை வைத்தும், தமிழக அரசு அதை நிராகரித்துவிட்டது. தமிழக அரசு முல்லைப்பெரியாறு அணையிலிருந்து உரிய முறையில் தண்ணீர் திறந்திருந்தால் இடுக்கி அணையிலிருந்து அதிக தண்ணீர் திறக்கப்பட்டு வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்காது. முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக உள்ளது. அதனால், 142 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கக் கூடாது' என்று குறிப்பிட்டு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது கேரள அரசு.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், `கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்துக்குத் தமிழக அரசு காரணம் இல்லை. இடுக்கி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்துக்குக் கேரள அரசுதான் காரணம். முல்லைப்பெரியாறு அணையிலிருந்து, இடுக்கி அணைக்கு 2 டி.எம்.சி அளவு தண்ணீர்தான் வெளியேற்றப்பட்டது. ஆனால், கேரள அரசு இடுக்கி அணையிலிருந்து 14 டி.எம்.சி தண்ணீரை வெளியேற்றியுள்ளது. அதனால், கேரள வெள்ளத்துக்குத் தமிழக அரசு பொறுப்பேற்க முடியாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.