வெளியிடப்பட்ட நேரம்: 14:04 (24/08/2018)

கடைசி தொடர்பு:14:25 (24/08/2018)

``கேரள வெள்ளச் சேதத்துக்குத் தமிழக அரசு காரணமல்ல!'' - தமிழக விவசாயிகள்

கேரள வெள்ளம் குறித்து அந்த மாநில அரசு தமிழக அரசு மீது குற்றஞ்சாட்டியது குறித்த கட்டுரை...

``கேரள வெள்ளச் சேதத்துக்குத் தமிழக அரசு காரணமல்ல!'' - தமிழக விவசாயிகள்

```கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்குத் தமிழக அரசும் காரணம்' என அந்த மாநில அரசு ஒரு பரபரப்பான குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளது. ஆனால், அதற்குத் தமிழக அரசு காரணமல்ல'' என்கிறார்கள், நம்மூர் விவசாயிகள்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், கனமழை காரணமாக அணையில் தற்போது 142 அடி நீர் உள்ளதாகவும் அணை பாதுகாப்பைக் கருதி நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. இந்த நிலையில், இவ்வழக்கில் கேரள அரசின் சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்கத் தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்றும், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக அரசு திடீரெனத் திறந்துவிட்ட தண்ணீரே, இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்துக்குக் காரணம் எனவும் அதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

கேரளா வெள்ளம்

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கேரள மாநில அரசு அளித்திருக்கும் அந்தப் பிரமாணப்பத்திரத்தில், ``கேரள மாநிலத்தில் ஏற்கெனவே மழை பெய்துவந்த நிலையில், இந்த மாதம் பெருமழை பெய்தது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி அதிகமாகவும், அணையில் நீரைத் தேக்கிவைக்கும் திறன் குறைவாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகமானதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகக் குறைக்குமாறு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு அதை ஏற்கவில்லை. கடந்த 15-ம் தேதி நள்ளிரவில் முல்லைப் பெரியாறு அணையின் மதகுகள் மூலம் திடீரென்று இடுக்கி அணைக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேலும், இடுக்கி அணையிலிருந்தும் நீர் திறந்துவிட வேண்டிய கட்டாயத்துக்குக் கேரள அரசு உள்ளானது. இதன் காரணமாகக் கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டிய உடனேயே, தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீரைத் திறந்துவிட்டிருந்தால் இவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்காது. வெள்ளச் சேதம் ஏற்பட்டதற்குத் தமிழகம் திடீரென்று தண்ணீரைத் திறந்துவிட்டதும் ஒரு காரணம் ஆகும்'' என்று தெரிவித்துள்ளது.

அய்யாக்கண்ணுஇதற்குப் பதிலளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்காததால், வெள்ளப் பாதிப்பு ஏற்படவில்லை. பல்வேறு அணைகளிலிருந்து அதிகளவில் உபரிநீர் வந்ததன் காரணமாக கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது. முல்லைப் பெரியாற்றில் 142 அடி தண்ணீர் இருப்பு வைக்கக் கூடாது என்பதற்காகவே கேரள அரசு தமிழக அரசு மீது தவறான குற்றச்சாட்டை முன்வைக்கிறது. கேரளாவின் 80 அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது'' என்றார்.

இதுகுறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணுவிடம் பேசினோம். ``வெள்ளச் சேதத்துக்குத் தமிழக அரசுதான் காரணம் எனக் கேரள அரசு முழுக்க முழுக்கப் பொய் சொல்கிறது. தமிழகத்தில் பொழிகின்ற மழையானது சில ஆறுகள் (பாண்டியாறு, சாலியாறு, பொன்னம்பல ஆறு) வழியாகக் கேரளாவுக்குச் செல்கின்றன. இதுதவிர,  கூடலூரை அடுத்துள்ள தேவாலா மற்றும் நீலகிரி பகுதிகளில் பொழியும் மழைநீரும் கேரளாவுக்கே செல்கிறது. இப்படிச் செல்லும் அந்த மழை நீர் அனைத்தும் வீணாகக் கடலில்தான் போய்க் கலக்கிறது. அப்படியிருக்கையில், அந்த ஆறுகளை அவர்கள் நம் பகுதிக்குத் திருப்பிவிட்டால் இதுபோன்ற வெள்ளத்திலிருந்து தப்பிக்க முடியும். அதை யாரும் செய்வதில்லை. தமிழக அரசும் தண்ணீருக்காகக் கர்நாடக மாநிலத்திடமே கையேந்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதைத் தவிர்த்து, தமிழகத்திலிருந்து கேரளா நோக்கிப் பாயும் ஆறுகளைத் திருப்பிவிட்டால் தமிழகத்தின் தண்ணீர்ப் பஞ்சமும் தீர்க்கப்படும்; கேரளாவும் வெள்ளச் சேதத்திலிருந்து தப்பும்'' என்றார் மிகத் தெளிவாக.

வெள்ளச் சேதத்துக்குப் பொருத்தமான காரணம்தான் என்னவோ?

நீங்க எப்படி பீல் பண்றீங்க