மாணவிகளுக்குக் பாலியல் தொல்லை! விடுதி உரிமையாளர் உட்பட 4 பேர் கைது

திருமுல்லைவாயில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தங்கியுள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் விடுதி உரிமையாளர், காப்பாளர்கள் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணை நடத்தும் போலீஸ்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் சரஸ்வதி நகரில் கடந்த இருபது வருடங்களாக நித்திய வாசல் என்ற பெண்கள் காப்பகம் இயங்கி வருகிறது. நேற்று திருமுல்லைவாயல் அரசுப்  பள்ளியில் சட்ட விழிப்பு உணர்வு முகாம் அம்பத்தூர் மாஜிஸ்திரேட் அனிதா ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. அப்போது, நித்திய வாசல் என்ற பெண்கள் காப்பகத்தில் உள்ள மாணவிகள் புகார் மனு ஒன்றைக் கொடுத்தனர். அதில், நித்தியவாசல் விடுதியில் தங்கியுள்ள மாணவிகளுக்குக் காப்பாளர் சாமுவேல் என்பவர் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் முத்து, பாஸ்கர் ஆகியோர் பெண் குழந்தைகளை அடித்துத் துன்புறுத்துவதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்தப் புகார் குறித்து விசாரிக்க குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செந்திலுக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து, ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் செந்தில். இந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விடுதிக் காப்பாளர்கள் பாஸ்கர், முத்து, விடுதி உரிமையாளர்கள் ஜேக்கப் மற்றும் விமலா ஜேக்கப் ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதனிடையே, விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த 23 மாணவிகள் 20 மாணவர்கள் ஆரிக்கம்பேட்டில் உள்ள தனியார் காப்பகத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!