பாலியல் புகார் - வேளாண்மைக் கல்லூரி பேராசிரியர் பணியிடை நீக்கம் | Agriculture College Professor Thangapandian dismissed

வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (24/08/2018)

கடைசி தொடர்பு:14:45 (24/08/2018)

பாலியல் புகார் - வேளாண்மைக் கல்லூரி பேராசிரியர் பணியிடை நீக்கம்

அரசு வேளாண் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக எழுந்த புகாரையடுத்து பேராசிரியர் தங்கபாண்டியனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் கோவை வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர்.

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே வாழவச்சனூரில் அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் உள்ளது. கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவருக்கு, அங்கு பணியாற்றும் பேராசிரியர் தங்கபாண்டியன் (40) கடந்த ஜனவரி மாதம் முதல், மாணவி தங்கிப் படிக்கும் விடுதிக்குச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு விடுதிக் காப்பாளர்கள் மைதிலி மற்றும் புனிதா ஆகிய  இருவரும் பேராசிரியருக்கு உடந்தையாக இருந்ததாக அந்த மாணவி கடந்த 20-ம் தேதி புகார் கொடுத்தார்.

பேராசிரியருக்கு உதவியாக இருக்கும் விடுதிக் காப்பாளர்கள் தன்னை மிரட்டும் ஆடியோவையும் அந்த மாணவி வெளியிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி மகிழேந்தி தானாக முன்வந்து புகாரை எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தினார். மேலும், மனித உரிமைகள் ஆணையக் குழு ஒரு வாரத்துக்கு வேளாண்மை கல்லூரியிலேயே தங்கி விசாரணை நடத்தி அறிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மாவட்ட எஸ்.பி.யும் விசாரணை நடத்த வேண்டும் என்றார். இந்த நிலையில், நேற்று கோயம்புத்தூர் ஒழுங்குமுறை நடவடிக்கை குழு இயக்குநர் சாந்தி, வேளாண்மை கல்லூரிக்கு வந்து கல்லூரி முதல்வரிடம் விசாரணை நடத்தினார். 

இந்த நிலையில், மாணவி என்மீது வேண்டுமென்றே பழி சுமத்துகிறார். அவரை அழைத்து விசாரணை செய்யுங்கள் என்று வாணாபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் பேராசிரியர் தங்கபாண்டியன். இந்நிலையில், பேராசிரியர் தங்கபாண்டியனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க