வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (24/08/2018)

கடைசி தொடர்பு:15:05 (24/08/2018)

கேரளத்துக்கு நிவாரணம் கொடுக்க வீடு வீடாக உண்டியல் ஏந்திய பள்ளி மாணவன்!

'கடவுளின் தேசம்' என்று வர்ணிக்கப்படும் கேரளாவைப் புரட்டிப்போட்ட மழைபாதிப்புக்கு நிவாரணம் தர கரூர் தனியார் பள்ளி மாணவர் ஒருவர் உண்டியல் ஏந்தி வீடு வீடாக நிதி சேகரித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரளா வெள்ளம்

கரூரைச் சேர்ந்த கார் மெக்கானிக் நசீர் உசேன் என்பவரின் மகன் முகமது சூரஜ். அங்குள்ள ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 7-வது வகுப்பு பயிலும் முகமது சூரஜ், இயல்பிலேயே இரக்க குணம் கொண்டவர். சென்னை வெள்ளம் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு தன்னாலான உதவிகளைச் செய்தவர். இப்போது, கேரள மாநில வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வீட்டில் பணம் கேட்டிருக்கிறார்.

ஏழ்மையின் காரணமாக கார் மெக்கானிக்கான அவரின் தந்தையால் உடனடியாக நிதி எதுவும் தரமுடியவில்லை. 'எப்படியாவது கேரள மக்களுக்கு உதவிட வேண்டும்' என்ற பதைபதைப்பில், தான் வசிக்கும் இந்திரா நகர் பகுதியில் வீடு, வீடாகச் சென்று உண்டியல் ஏந்தி வசூல் செய்தார். மாணவனின் ஆர்வத்தைப் பாராட்டிய அப்பகுதி மக்கள் தயங்காமல் தங்களால் இயன்ற நிதியை உண்டியலில் போட்டனர். அப்படி சேகரித்ததில் ரூ.2,169 கிடைத்தது. அந்தத் தொகையை கேரளாவுக்கான நிவாரண நிதியாக கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷிடம் மாணவர் முகமது சூரஜ் வழங்கினார்.

மாணவனின் ஈகை குணத்தைப் பாராட்டிய மாவட்ட வருவாய் அலுவலர், 'இந்த இரக்க குணத்தை காலத்துக்கும் விட்டுவிடாதே. உனக்கு எல்லா வளமும் கிடைக்கும். வாழ்க்கையில் மேன்மேலும் உயர மனமார வாழ்த்துகள்' என்று கூறி, முகமது சூரஜுக்கு சால்வை அணிவித்து பாராட்டி அனுப்பினார்.

மாணவர் முகமது சூரஜிடம் பேசினோம். ``கேரள வெள்ளப்பாதிப்பை டி.வி-யில் பார்த்தபோது, அதிர்ச்சியா போயிட்டு. ரெண்டு நாளா சரியா தூக்கம் இல்லை. அவங்களுக்கு எப்படியாவது உதவ வேண்டும்ன்னு மனசுல வைராக்கியம் இருந்தாலும், வீட்டில் ஏழ்மை நிலைமை. அதனால், உண்டியலை வைத்து அக்கம்பக்கத்து வீடுகள்ல வசூல் பண்ணி, அதை டி.ஆர்.ஓ சார்கிட்ட கொடுத்தேன். இன்னும் என்னால் ஆன பணத்தை மறுபடியும் வசூல் செய்து, கேரளத்துக்கு அனுப்ப இருக்கிறேன்" என்றார்.