வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (24/08/2018)

கடைசி தொடர்பு:15:10 (24/08/2018)

இனி ஹெல்மெட் இல்லனா லிஃப்ட் கூட கிடைக்காது!’ - சாலை விதிகளில் கெடுபிடி காட்டும் காவல்துறை

'இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் இருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் அமல்படுத்தப்படும்' என்று தமிழ்நாடு காவல்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. 

உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றத்தில், சமூக ஆர்வலர் கே.கே.ராஜேந்திரன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், 'இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வாகன ஓட்டிகளும், பின்னால் இருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று மோட்டார் வாகன சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இருசக்கர வாகனத்தில் பின்னால் இருப்பவர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், கார் ஓட்டுபவர்கள் கட்டாயம் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்றும் மோட்டார் வாகன சட்டத்தில் உள்ளதை அமல்படுத்துமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக காவல்துறைத் தலைவர் டி.கே.ராஜேந்திரன் சார்பில், 'இருசக்கர வாகனத்தின் பின்னால் உட்கார்ந்து செல்வோருக்கும் கட்டாயம் ஹெல்மெட் அமல்படுத்தப்படும்' என்று உறுதியளிக்கப்பட்டது. வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், 'இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள்மீது எடுத்த நடவடிக்கை பற்றி ஆகஸ்ட் 31-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.