முதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு! கறார் காட்டிய போலீஸ்... கொந்தளித்த விவசாயிகள் | People banned to meet Edappadi palanisamy

வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (24/08/2018)

கடைசி தொடர்பு:16:35 (24/08/2018)

முதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு! கறார் காட்டிய போலீஸ்... கொந்தளித்த விவசாயிகள்

'கொள்ளிடம் அணை விவகாரம் தொடர்பாக விவசாய சங்கங்கள் வாய் திறக்கக் கூடாது' என நினைக்கும் தமிழக அரசு, அவர்களைச் சந்திக்க  மறுப்பதாகவும், அவர்களை ஒடுக்குவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
 
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
 
திருச்சி முக்கொம்பு மேலணை மதகுகள் உடைந்து பாலம் துண்டிக்கப்பட்டது. இதனால் மேட்டூரில் இருந்து திருச்சி காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் முழுவதும் உடைந்த மதகுகள் வழியாகக் கொள்ளிடத்தில் வெளியேறியது. இந்தப் பிரச்னை தொடர்பாகப் பொதுமக்கள், விவசாய சங்க நிர்வாகிகள் கேள்வி எழுப்பக் கூடாது என அரசு நினைக்கிறது. இன்று திருச்சி - முக்கொம்பில் கொள்ளிடம் மேலணையில் உள்ள 9 கதவணைகள் உடைப்பு ஏற்பட்டுள்ளதைப் பார்வையிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து திருச்சி வழியாக முக்கொம்பு வந்தார். அமைச்சர்கள் காமராஜ், துரைக்கண்ணு, வெல்லமண்டி நடராஜன், சரோஜா உள்ளிட்ட அமைச்சர்களும், திருச்சி மாவட்ட செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.பி.குமார்,  நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்திலிங்கம், ரத்தினவேலு எம்.எல்.ஏ-க்கள் பரமேஸ்வரி, செல்வராஜ் ஆகியோரும் ஆய்வுசெய்தனர், முக்கொம்பு கதவணைகளுக்குப் பதிலாக, 410 கோடியில் புதிய கதவணைகள் கட்டப்படும் என்றும்,  அதற்கான பணிகள் ‌ 15 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
 
அய்யாக்கண்ணுஅப்போது, முக்கொம்பு வந்த தமிழக முதல்வரை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர்  அய்யாக்கண்ணு சந்தித்து, அணை உடைப்பு தொடர்பான காரணங்கள் மற்றும் அணை உடைப்பால் ஏற்படும் விவசாய பாதிப்பு குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க வந்தார். முக்கொம்பு நுழைவுவாயிலேயே காவல்துறை அதிகாரிகள் அய்யாக்கண்ணுவை தடுத்துக் கைதுசெய்து, முதல்வரை சந்திக்க அனுமதி இல்லை என்று  கூறி அழைத்துச்சென்றனர்.
 
இதேபோல, தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்டத் தலைவர் மா.ப.சின்னதுரை முக்கொம்பு வந்தால் பிரச்னை என நினைத்த போலீஸார், அவர் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என  வீட்டுச் சிறையில் வைத்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், நேற்று உடைந்த முக்கொம்பு கொள்ளிடம் அணையை ஆய்வுசெய்த  முதலமைச்சர் செயலாளர் சாய்குமாரை சந்திக்க அனுமதி மறுத்ததால், தர்ணாவில் ஈடுபட முயன்ற பி.ஆர்.பாண்டியன், த.மா.கா விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளர் புலியூர் நாகராஜன் ஆகியோரை அப்புறப்படுத்தினர். அதனால் கோபமடைந்த பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர், தர்ணாவில் ஈடுபட்டனர்.
 
பி.ஆர்.பாண்டியனை அழைத்துச் செல்லும் போலீஸ்
 
இதுகுறித்து பி.ஆர்.பாண்டியன்,  "காவிரி - கொள்ளிடம் ஆற்றில் கரூர் முதல் திருச்சி வரை கடந்த 15 ஆண்டுகளில் நடந்த மணல் கொள்ளையே கொள்ளிடம் இரும்பு பாலம் மற்றும் முக்கொம்பு அணை பாலம் உடையக் காரணம். நீதிமன்ற உத்தரவுப்படி ஆறுகளில் 5 அடி அளவுதான் மணல் அள்ள வேண்டும். ஆனால், அரசு குவாரிகளிலும் அனுமதி பெறாத பல திருட்டுக் குவாரிகளிலும் காவிரி ஆறுகளில் 50 அடி முதல் 100 அடி ஆழம் வரை மணலை அள்ளி விட்டனர். பாலங்களின் அடியிலும் இந்த மணல் கொள்ளை நடந்தது. அதனால்தான் வெள்ளம் வரும் நேரங்களில் பள்ளங்களை நிரப்ப வெள்ள நீர் பாலங்களின் அருகில் உள்ள மணல் திட்டை அள்ளிக்கொண்டுசெல்கிறது. அப்போது, பாலத்தின் தூண் அருகில் அரிப்பு ஏற்படுகிறது. இதனால், பாலச் சுவர் வலுவிழந்து போய்விடுகிறது. இதனால்தான், பலவீனம் அடைந்த கொள்ளிடம் பழைய பாலமும், முக்கொம்பு கொள்ளிடம் மேலணைப் பாலமும் உடைந்துள்ளன. 
 
கடந்த ஆண்டு, கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி. அணையின் மதகுகள் உடைந்தன. தொடர்ந்து, எடப்பாடி அருகில் உள்ள அணையிலும் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைகளின் பாதுகாப்பையும் ஆய்வுசெய்து உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வோர் ஆண்டும், தமிழக அரசு நீர் மேலாண்மையில் அணைகள் பாதுகாப்பு, பராமரிப்புக்கு ஒதுக்கீடுசெய்த தொகை, செலவு செய்தது  குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க