வெளியிடப்பட்ட நேரம்: 16:11 (24/08/2018)

கடைசி தொடர்பு:16:11 (24/08/2018)

`விஜயகாந்த்துக்காக பிரார்த்தனை செய்தீர்கள்’ - கண்கலங்கிய பிரேமலதா

``தமிழக மக்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டவர் தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த்'' எனப் பிரேமலதா தெரிவித்துள்ளார். 

விஜயகாந்த் - பிரேமலதா

தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் இன்று வறுமை ஒழிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், அவரின் மனைவி பிரேமலதா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய பிரேமலதா, `அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, கேப்டன் உடல்நிலை குறித்து தமிழக மக்கள் மிகவும் வருத்தப்பட்டார்கள். அவரின் உடல்நிலை விரைவில் முன்னேற்றம் அடையத் தமிழக மக்கள் பிரார்த்தனைகள் மேற்கொண்டனர் என்று பேசியபோது கண்கலங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், கேப்டனுக்கு எப்போதும், தமிழகத்தின்மீதுதான் சிந்தனை. நிச்சயம் தமிழ்நாட்டின் முதல்வராக அவர் பதவியேற்பார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, காலை 6 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். எழுந்ததும் முதல் வேலையாகத் தொலைக்காட்சியில் தமிழகத்தின் நிலைகுறித்து அறிந்துகொள்வதில்தான் அதிக ஆர்வம் காட்டினார்' எனப் பேசிய அவர், 

விஜயகாந்த் -பிரேமலதா

`சிகிச்சை முடிந்த பிறகு தமிழகம் திரும்பத் திட்டமிட்டபோதே முதலில் கலைஞரின் நினைவிடத்துக்குத்தான் செல்ல வேண்டும் எனக் கேப்டன் முடிவுசெய்துவிட்டார். ஆனால், விமான நிலையத்திலிருந்து நேராகக் கலைஞரின் நினைவிடத்துக்குச் செல்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மக்களுக்கு உதவும் வகையில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளிடம் தெரிவித்து, தே.மு.தி.க சார்பில் ரூ.1 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது' என்றார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜயகாந்த் தொண்டர்கள் மத்தியில் எதுவும் பேசவில்லை.