'கொஞ்சம் சத்தமா சொல்லிப் பாருங்களேன் முதலமைச்சரே?'- ராமதாஸ் கிண்டல் | Ramadoss slams Edappadi palanisamy

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (24/08/2018)

கடைசி தொடர்பு:16:15 (24/08/2018)

'கொஞ்சம் சத்தமா சொல்லிப் பாருங்களேன் முதலமைச்சரே?'- ராமதாஸ் கிண்டல்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கருத்தை விமர்சித்து, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.

ராமதாஸ்
 

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அவ்வப்போது முதல்வர், துணை முதல்வரை கலாய்த்துப் பதிவிடுவது வழக்கம். இன்றும் அப்படித்தான்... அ.தி.மு.க-வை விமர்சித்து வரிசையாகப்  பதிவுகளைப் பகிர்ந்தார்.  

நிர்மலா சீதாராமன், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்திக்க நேரம் ஒதுக்காத விவகாரம் சமீபத்தில் விவாதத்தைக் கிளப்பியது. அதுகுறித்து இன்று பதிவிட்ட ராமதாஸ்,  "டெல்லியில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்னை சந்திக்க மறுத்தது அவமானம் தான். ஆனாலும், அவர் ஹெலிகாப்டர் கொடுத்ததற்காகத் தாங்கிக்கொண்டேன்: ஓ.பன்னீர்செல்வம் - இது என்ன புதிதா? இதையெல்லாம் பார்த்தால் சி.எம்.டி.ஏ, வீட்டுவசதின்னு கோடிகளைப் பார்க்க முடியுமா?” என்று பதிவிட்டுள்ளார். 

 “பள்ளிக் கல்வித்துறையின் பாடத்திட்டச் செயலாளர் பதவியிலிருந்து உதயசந்திரன் மாற்றப்பட்டது அப்பட்டமான பழிவாங்கல். ஊழல் எதிர்ப்புக்குக் கிடைத்த வெகுமதி. அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் வரை பழைய பதவியில் அவர் தொடர வேண்டும்” என்றும் தமிழக அரசை விமர்சித்துப் பதிவிட்டிருந்தார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  சமீபத்தில் சட்டப்பேரவை நிகழ்வின்போது, ‘நாங்கள் பா.ஜ.க-வை எதிர்க்கவேண்டிய நேரத்தில் எதிர்ப்போம்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து இன்று ட்வீட் செய்துள்ள ராமதாஸ்,  “நான் பாரதிய ஜனதாவுக்கு அடிமை இல்லை. பா.ஜ.க-வை எதிர்க்கவேண்டிய விஷயத்தில் எதிர்ப்பேன்; எடப்பாடி பழனிசாமி - அப்படியா... கொஞ்சம் சத்தமா சொல்லிப் பாருங்களேன் முதலமைச்சரே?”  என்று எதிர்வினையாற்றியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க