`முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 139.9 அடியாகப் பராமரிக்க வேண்டும்'- உச்ச நீதிமன்றம் உத்தரவு!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை வரும் 31-ம் தேதி வரை 139.9 அடியாகப் பராமரிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கேரள வெள்ளப் பாதிப்பு சமயத்தில் அதிகமான மழைப்பொழிவு காரணமாக, முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது. ஆனால், அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகk குறைக்க வேண்டும் என வலியுறுத்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வருக்கும், பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதினார். தொடர்ந்து, இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த ரசூல் ஜாய் என்பவர், இதே கோரிக்கையை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குth தொடர்ந்தார். 

இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றபோது, கேரள அரசின் சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்யப்பட்டது. அப்போது, ``சரியான நேரத்தில் முறையாக, கவனமாக முல்லைப் பெரியாறு அணையின் நீரைத் திறந்துவிட்டிருந்தால், கேரள வெள்ளப் பாதிப்பை பெருமளவு குறைத்திருக்க முடியும். கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர ஆரம்பித்தது. அப்போது கேரள அரசின் தலைமைச் செயலர், தமிழக அரசின் தலைமைச் செயலரை போனில் தொடர்புகொண்டு பேசினார். அணையில் இருந்து தண்ணீரை படிப்படியாகத் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து உரிய முறையில் தண்ணீர் திறந்திருந்தால், இடுக்கி அணையில் இருந்து அதிக தண்ணீர் திறக்கப்பட்டு, வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டிருக்காது" என்று தெரிவிக்கப்பட்டது. 

பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்தக் குற்றச்சாட்டுக்கு, இன்று தமிழக அரசு சார்பில் பதில் தெரிவிக்கப்பட்டது. அதில், ``இடுக்கி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்கு தமிழகம் காரணம் எனக் கூறுவதை ஏற்க முடியாது. கேரள அரசே காரணம். ஆகஸ்ட் 15-ல் முல்லைப் பெரியாறு 140 அடியை எட்டியபோது, 1.24 டிஎம்சி தண்ணீர் இடுக்கி அணைக்குத் திறக்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் இடுக்கி அணையில் இருந்து 13.79 டிஎம்சியை கேரள அரசு திறந்துவிட்டது. இதேபோல, ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை மொத்தம் 36.28 டிஎம்சி நீர் இடுக்கி, இடைமலை அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்டது. இதுவே, வெள்ளத்துக்கான காரணம்" என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ''முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை வரும் 31-ம் தேதி வரை 139.9 அடியாகப் பராமரிக்க உத்தரவிட்டதுடன், அணையின் நீர்மட்டம் கூடாமல் இருப்பதுகுறித்து மத்திய துணைக்குழு கண்காணிக்க வேண்டும்'' எனவும் உத்தரவிட்டது. வழக்கு, செப்டம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!