கருணாநிதி நினைவேந்தலுக்கு அமித்ஷா வருவதைக் கொச்சைப்படுத்த வேண்டாம்! - பொன்.ராதாகிருஷ்ணன்

''மக்களுக்காக 70 ஆண்டுக்காலம் பணியாற்றி மறைந்தவர் கருணாநிதி. அவரின் அஞ்சலி நிகழ்ச்சிக்கு பா.ஜ.க தேசியத்தலைவர்  அமித்ஷா வருவதை கொச்சைப்படுத்த வேண்டாம்'' என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

பொன் ராதாகிருஷ்ணன்
 

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி, பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று விருதுநகர் வந்தடைந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''வாஜ்பாயின் அஸ்தியை வைத்து பா.ஜ.க அரசியல்செய்கிறது என்று அவர் உறவினர் சொல்வதாகக் கூறுவது தவறு. அப்படிச் சொல்பவர் உறவினரே கிடையாது. வாஜ்பாயிக்கு  குடும்பம் கிடையாது. மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர். எவர் ஒருவர்  நாட்டுக்காக,  மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்தாரோ, அவருக்கு நாட்டிலுள்ள 120 கோடி மக்களும் சொந்தம்தான். தனிப்பட்ட உறவு கிடையாது.  நாட்டுக்காக வாழ்ந்த மகான்கள்  நாட்டு மக்களுக்கே சொந்தம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உள்கட்சிப் பிரச்னை பற்றிப் பேசுவது நாகரிகமாக இருக்காது. மிகப் பெரிய தலைவரை இழந்து நிற்கிறார்கள். அவர்கள் குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து மீண்டு  வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். மக்களுக்காக 70 ஆண்டுக்காலம் பணியாற்றி மறைந்தவர் கருணாநிதி. அவரின் அஞ்சலி நிகழ்ச்சிக்கு பா.ஜ.க தேசியத்தலைவர்  அமித்ஷா வருவதைக் கொச்சைப்படுத்த வேண்டாம். அதைத் தேர்தல் கூட்டணி என்று பார்க்க வேண்டாம்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!