`சிறுநீர் போகக்கூட அனுமதிக்க மாட்றீங்க; நான் என்ன தீவிரவாதியா?’ - போலீஸ் மீது பாய்ந்த திருமுருகன் காந்தி

சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமுருகன் காந்தி
 

வேலூர் சிறையில் இருக்கும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் போலீஸார் நேற்று ஆஜர்படுத்தினர். கடந்த ஏப்ரல் 15-ம் தேதி, நாகை மாவட்டம்  சீர்காழியில், அம்பேத்கரின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்  திருமுருகன் காந்தி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகப் பேசியதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணை நேற்று சீர்காழி நீதிமன்றத்தில் நடைபெற்றது.  வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை செப்டம்பர்  6-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

இந்த நிலையில், இன்று மீண்டும் அவர்மீது மற்றொரு வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், `பாலஸ்தீனத்தில் நடந்ததுபோல இங்கு போராட்டம் நடைபெறும்’ என்று பேசியதாக, அவர்மீது சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் கீழ் விசாரணை இல்லாமல் ஆறு மாதம் சிறையில் வைக்கலாம். இது, தீவிரவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் சட்டம்.  

திருமுருகன் காந்தி
 

 அந்த வழக்கில் இன்று மதியம், சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திருமுருகன் காந்தியை செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முற்பட்டனர். அப்போது அவர், ஆவேசமாக காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். ‘என்ன, ஏன் இப்படி சித்ரவதை பண்றீங்க. நான் என்ன தீவிரவாதியா? வண்டிய நிறுத்துங்கன்னு நிறைய வாட்டி சொன்னேன். சிறுநீர் கழிக்கணும்னு மூணு மணி நேரமா சொல்றேன். வண்டிய நிறுத்தவில்லை.  எஸ்.வி.சேகரை மட்டும் ஏன் இன்னும் கைதுசெய்யல. சிறுநீர்போகக் கூட அனுமதிக்க மாட்றீங்க. என்னைப் பரிசோதித்த மருத்துவர் எனக்கு சிகிச்சை அளிக்கனும்னு சொன்னாங்க. அதுக்குக்கூட அனுமதிக்கல. என்னை ஏன் தனிமைச் சிறையில அடைச்சு வெச்சிருக்கீங்க. காவல் துறையின் நியாமற்ற போக்கு இது’ என்று கோபம் தெறிக்கப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ‘'என்மீது உபா (UAPA) வழக்கு போட்டிருக்காங்க. பயங்கரவாதிங்கமீது போடுற வழக்கு அது. மோடி அரசை விமர்சித்தால் அந்த வழக்கு போடுவீங்களா? நூறு முறை உபா வழக்கு போடுங்க. நான் பயப்பட மாட்டேன்’' என்றார். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!