`தி.மு.க அழைப்பு விடுத்தால் நினைவேந்தலில் பங்கேற்பது குறித்து ஆலோசிப்போம்' - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி! | If DMK calls, we will attend the karunanidhi's Commemoration function, says o pannerselvam

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (24/08/2018)

கடைசி தொடர்பு:19:40 (24/08/2018)

`தி.மு.க அழைப்பு விடுத்தால் நினைவேந்தலில் பங்கேற்பது குறித்து ஆலோசிப்போம்' - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!

கருணாநிதி நினைவேந்தலில் தி.மு.க அழைப்பு விடுத்தால் பங்கேற்போம் எனத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓ பன்னீர்செல்வம்

தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி மறைந்தார். அவரது மறைவை அடுத்து தி.மு.க சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கவிஞர்கள் பங்கேற்ற நினைவேந்தல் நிகழ்ச்சி மதுரையிலும், பத்திரிகையாளர்கள் பங்கேற்ற நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்சியிலும் நடத்தப்பட்டது. இந்நிலையில், வரும் 30ம் தேதி அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க பல்வேறு மாநிலத் தலைவர்களுக்கு தி.மு.க சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பரூக் அப்துல்லா மற்றும் சீதாராம் யெச்சூரி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இதற்காக ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது. எனினும், இந்தக் கூட்டத்தில் மாநில தலைவர்கள் பங்கேற்பது குறித்து எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. 

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ``தி.மு.க அழைப்பு விடுத்தால் பங்கேற்பது குறித்து கட்சித் தலைமையில் ஆலோசிக்கப்படும். அமித் ஷா தி.மு.கவின் அழைப்பை ஏற்று வருவதில் எந்த பிரச்னையும் இல்லை" என்று கூறினார். இதேபோல் அவரிடம் நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு,``நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டி என்ற நிலையிலிருந்து விஜயகாந்த் மாறாமல் இருக்க வேண்டும்" என்றார். முன்னதாக முல்லைப்பெரியாறு அணை குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ``136 அடியாக நீர் மட்டம் உயர்ந்த போதே இடுக்கி கலெக்டரும், தேனி கலெக்டரும் இணைந்து முதல்கட்ட எச்சரிக்கையை விடுத்தனர். இதன்பின் 138 அடியாக நீர் மட்டம் இருந்தபோது இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடப்பட்டது. தொடர்ந்து இரு மாவட்ட கலெக்டர்களும் தொடர்பில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர். ஆனால் இப்போது தமிழகத்தின் மீது பழிபோடுகிறார்கள். இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது" என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க